டெல்லி: ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் முதல் கூட்டம் இன்று நடைபெறுகிறது. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே, பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடரில், ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. கடந்த மாதம் 17-ம் தேதி, மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேத்வால், மக்களவையில் மசோதாவை தாக்கல் செய்தார்.
எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக, இந்த மசோதா, பார்லிமென்ட் கூட்டுக்குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. இதைத் தொடர்ந்து, 12 ராஜ்யசபா உறுப்பினர்கள் மற்றும் 27 லோக்சபா உறுப்பினர்கள் அடங்கிய, 39 பேர் கொண்ட பார்லிமென்ட் கூட்டுக்குழு, ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற தலைப்பில் அமைக்கப்பட்டது.
பாஜக எம்பி பிவி சவுத்ரி தலைமையிலான குழுவில் பிரியங்கா காந்தி மற்றும் திமுகவைச் சேர்ந்த பி.வில்சன் மற்றும் செல்வகணபதி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் முதல் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் சட்ட அதிகாரிகள் குழு உறுப்பினர்களுக்கு மசோதாவில் உள்ள விதிகள் குறித்து விளக்கமளிப்பார்கள். இதைத் தொடர்ந்து, மசோதாவின் சாதக பாதகங்கள் குறித்து உறுப்பினர்கள் ஆலோசிப்பார்கள்.