ஜார்கண்ட்: சட்டசபை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு ஜார்க்கண்ட் மாநிலத்தில் நாளை நடைபெறுகிறது. மாவோயிஸ்ட்கள் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் போதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
81 தொகுதிகளை கொண்ட ஜார்க்கண்ட் சட்டசபைக்கு நாளை மற்றும் 20-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் 15 மாவட்டங்களில் உள்ள 43 தொகுதிகளில் 73 பெண்கள் உள்பட 683 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். முதல் கட்ட தேர்தலில் 2 கோடியே 7 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
இந்நிலையில், மாவோயிஸ்ட்கள் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஜார்க்கண்ட் மாநில தலைமை தேர்தல் அதிகாரி கே.ரவிக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். மாவோயிஸ்ட்கள் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் மக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் போலீஸார் மற்றும் துணை ராணுவப் படையினர் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்றார்.
முதற்கட்ட தேர்தலுக்காக 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளதாகவும் ஜார்க்கண்ட் மாநில தலைமை தேர்தல் அதிகாரி கே.ரவிக்குமார் தெரிவித்தார்.