பனிஹால்: இமயமலை மற்றும் பனிபடர்ந்த மலைகள் வழியாக கத்ரா-பனிஹால் இடையே முதல் சோதனை ரயில் நேற்று வெற்றிகரமாக இயக்கப்பட்டது. காஷ்மீரில் கத்ரா மற்றும் பனிஹால் இடையே ரயில் சேவையைத் தொடங்க கடந்த மாதத்தில் ஆறு சோதனைகள் தண்டவாளத்தில் நடத்தப்பட்டன.
இந்தியாவின் முதல் கேபிள் ரயில் பாலம், அஞ்சி காட் பாலம் மற்றும் உலகின் மிக உயரமான ரயில்வே, கவுரியில் உள்ள செனாப் பாலம் உள்ளிட்ட முக்கிய வழித்தடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில் நேற்று முதல் சோதனை ரயில் இமயமலை மற்றும் பனி படர்ந்த மலைகள் வழியாக முதன்முறையாக இயக்கப்பட்டது. சோதனை ரயில் மதியம் 1.30 மணிக்கு பனிஹால் ரயில் நிலையத்தை அடைந்தது.
இது குறித்து, உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா ரயில் இணைப்பின் சந்தீப் குப்தா கூறுகையில், ”வரும், 7 மற்றும் 8-ம் தேதிகளில், ரயில்வே பாதுகாப்பு கமிஷனர், சட்டப்படியான ஆய்வு மற்றும் சோதனைகளை மேற்கொள்வார். அதன் பிறகு, ஆய்வு குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்படும். இதைத் தொடர்ந்து ரயில் சேவை தொடங்குவது தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கை தொடங்கும்” என்றார்.