செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், ஏரியின் நீர்மட்டம் 23.29 அடியாக உயர்ந்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது.
இதனால் நீர் வெளியேற்றம் துவங்கி கடந்த 13ம் தேதி காலை முதல் 1,000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு பின்னர் இந்த அளவு 4,500 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. இன்று (14ம் தேதி) மதியம் 12 மணி முதல் வினாடிக்கு 6,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
இதனால் செம்பரம்பாக்கம் ஏரியை ஒட்டிய கிராமங்களில் குறிப்பாக திருமுடிவாக்கம், நந்தம்பாக்கம் போன்ற பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் அடையாறு ஆற்றின் கரையோரங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.