டெல்லியில் நேற்று மத்திய ஊழல் தடுப்பு ஆணையம் ஏற்பாடு செய்திருந்த விழிப்புணர்வு கூட்டத்தில் கலந்து கொண்ட குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, ஊழல்வாதிகளை தடுக்க சட்ட நடவடிக்கையின் முக்கியத்துவம் குறித்து பேசினார். அவர் பேசுகையில், “சமூக வாழ்வின் அடித்தளம் நம்பிக்கை. அதுவே சமூக ஒற்றுமையின் அடிப்படை.
மக்கள் அதன் செயல்பாடுகளை நம்பும்போதுதான் ஒரு அரசு அமைப்பு அர்த்தம் பெறுகிறது. ஊழல் என்பது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மட்டுமல்ல, சமூக நம்பிக்கைக்கும் தடையாக உள்ளது. இது மக்களின் நம்பிக்கையை குலைக்கிறது. தாமதமான நடவடிக்கை ஊழல்வாதிகளை ஊக்குவிக்கிறது. எனவே ஊழலுக்கு எதிராக சரியான நடவடிக்கை மிகவும் முக்கியமானது.
அதேசமயம், உள்நோக்கத்துடன் நடவடிக்கை எடுக்கக் கூடாது. கடந்த 10 ஆண்டுகளில் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் 12 பில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்திய அரசின் கொள்கைகள் ஊழலை முற்றிலுமாக ஒழிக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்,” என்றார்.