கொல்கத்தா: மேற்கு வங்கத்தின் முன்னாள் முதல்வர், மற்றும் சிபிஐ(எம்) தலைவருமான புத்ததேவ் பட்டாச்சார்ஜி, உடல் நலக்குறைவால் வியாழன் காலை காலமானார். அவருக்கு வயது 80.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் முகமது சலீம் கூறுகையில், இடது முன்னணியின் கடைசி முதல்வர் தனது நீண்டகால நோயை துணிச்சலுடன் எதிர்த்துப் போராடினார். “இன்று அவரது உடல்நிலை மோசமடைந்தது மற்றும் மருத்துவர்கள் அவரை உயிர்ப்பிக்க முயன்றனர், ஆனால் இயலவில்லை. இது எங்களுக்கு ஒரு இருண்ட நாள். அவரது கொள்கைகளை நாங்கள் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வோம்,” என்றார்.
தலைவர்கள் மற்றும் தொழிலாளர்கள் இறுதி அஞ்சலிகளை செலுத்துவதற்காக, அவரது உடல் வெள்ளிக்கிழமை காலை கொல்கத்தாவில் உள்ள சிபிஐ(எம்) அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்படும். இதைத் தொடர்ந்து ஊர்வலம் நடைபெறும்.
பட்டாச்சார்ஜி தனது உடலை மருத்துவ ஆராய்ச்சிக்காக தானம் செய்துள்ளதாகவும், எந்த மருத்துவமனையில் அதை பெறுவது என்பதற்கான முடிவுகள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் சலீம் கூறினார்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது வருத்தத்தை மற்றும் அவரது குடும்பத்தாருக்கு இரங்கல்களை தெரிவித்து, “முன்னாள் முதல்வர் ஸ்ரீ புத்ததேவ் பட்டாச்சார்ஜியின் திடீர் மறைவு அதிர்ச்சியும் வருத்தமும் அளிக்கிறது. கடந்த பல ஆன்டுகளாக நான் அவரை அறிந்திருக்கிறேன். அவரது இறுதிப் பயணத்தில் முழு மரியாதையையும் சடங்கு மரியாதையையும் வழங்குவோம்” என்றார்.