புதுடில்லி: இந்தியா மற்றும் பிரான்ஸ் இணைந்து உருவாக்கும் 120 கேஎன் திறன் கொண்ட போர் விமான இன்ஜின் திட்டம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பிரதமர் மோடி சுதந்திர தின உரையில் உள்நாட்டு போர் விமான இன்ஜின் மேம்பாட்டின் அவசியத்தை வலியுறுத்தியிருந்தார். அதேபோல பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், “இந்தியா விரைவில் தன்னுடைய சொந்த போர் விமான இன்ஜினை உருவாக்கும்,” என்று தெரிவித்திருந்தார். இந்த அறிவிப்புகளுக்குப் பிறகு, திட்டத்திற்கு அரசின் ஆதரவு மேலும் வலுவடைந்தது.

இந்த முயற்சியில், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (DRDO) கீழ் செயல்படும் எரிவாயு டர்பைன் ஆராய்ச்சி நிலையம் (GTRE) மற்றும் பிரான்ஸின் சப்ரான் நிறுவனம் இணைந்து பணியாற்றுகின்றன. இவை நடுத்தர போர் விமானங்களுக்கு உகந்த இன்ஜினை உருவாக்கும் நோக்கத்துடன் செயல்படுகின்றன. மத்திய அரசு விரைவில் திட்டத்திற்கு அதிகாரப்பூர்வ ஒப்புதலை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதற்கட்டமாக உருவாக்கப்படும் இன்ஜினின் திறன் 120 கேஎன் ஆக இருக்கும். ஆனால் அடுத்த 12 ஆண்டுகளில் அதை 140 கேஎன் திறனுக்கு மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது இந்திய பாதுகாப்பு துறைக்கு புதிய வலிமையை அளிக்கவுள்ளது. மேலும், இந்த ஜெட் இன்ஜின்கள் இந்திய அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்பு விதிகளின் கீழ் தயாரிக்கப்படுகின்றன. அதனால் தொழில்நுட்ப உரிமைகள் இந்தியாவிடம் நிலைத்திருக்கும்.
இந்த திட்டம் நிறைவேறிய பின், இந்தியா தனது சொந்த போர் விமான இன்ஜின் தொழில்நுட்பத்தில் முன்னேற்றம் காணும். இது வெளிநாட்டு சார்பினை குறைக்கும் மட்டுமல்லாமல், உலகளாவிய பாதுகாப்பு சந்தையிலும் இந்தியாவின் நிலையை உயர்த்தும். பிரான்ஸ் மற்றும் இந்தியா இணைந்து மேற்கொள்ளும் இந்த முயற்சி, இருநாடுகளுக்கிடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் முக்கிய முன்னேற்றமாக கருதப்படுகிறது.