பஹல்காம் தாக்குதலுக்கு பின், இந்தியா பாகிஸ்தானின் மூன்று ராணுவ தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில், பாகிஸ்தான் ராணுவமும் ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், குஜராத் பகுதிகளில் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது.
இருநாடுகளும் மாறி மாறி தாக்குதல்களை நடத்தியுள்ள நிலையில், நிலைமை பரபரப்பாக மாறியுள்ளது.இந்த சூழலில், ஜி7 நாடுகள் இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடியாக நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என வலியுறுத்தியுள்ளன. ஜி7 அமைப்பில் உள்ள நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் இணைந்து அறிக்கையொன்று வெளியிட்டுள்ளனர்.

அதில், கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி நடந்த பஹல்காம் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.பிராந்தியத்தின் நிலைமை தீவிரமடைந்து வருவதாகவும், மக்கள் பாதுகாப்பு முக்கியம் என்பதால் மேலும் மோதல்களை தவிர்க்க வேண்டும் என்றும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இருநாடுகளும் அமைதிக்காக உடனடியாக உரையாடல் நடத்த வேண்டும் என்பதே ஜி7 நாடுகளின் நிலைப்பாடாகும்.
இந்த தாக்குதல்களால் பிராந்தியத்தில் நிலவும் பதற்றம் அதிகரித்து வருகிறது. மக்கள் உயிர் பாதுகாப்பு ஆபத்தில் உள்ள நிலையில், சர்வதேச அமைப்புகள் கவனம் செலுத்த தொடங்கியுள்ளன. இந்திய ராணுவம் தொடர்ந்து ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களை முறியடித்து வருகிறது. இதனால் எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.ஜி7 நாடுகள் தரப்பில் கூறப்பட்டுள்ளதுபோல் இருநாடுகளும் தூதரக வழியில் பதட்டத்தை குறைக்கும் முயற்சிகளில் ஈடுபட வேண்டியது அவசியமாகியுள்ளது. மேலும் பதிலடி நடவடிக்கைகள் அல்லாமல் பேச்சுவார்த்தை வழியே தீர்வு காணப்பட வேண்டும் என்ற எண்ணம் உலக நாடுகளில் அதிகரிக்கிறது.