அகமதாபாத்தைச் சேர்ந்த பொறியாளர் கேசவ்காந்த் சர்மா உருவாக்கியுள்ள “Gati” என்ற ட்ரோன், இந்திய ராணுவத்தின் முக்கிய கவனத்தை ஈர்த்துள்ளது. Protthapan எனும் நிறுவனத்தின் மூலம் உருவாக்கப்பட்ட இந்த ட்ரோனுக்கு, 20க்கும் மேற்பட்ட யூனிட்கள் என்ற அளவில் ராணுவம் முதல்கட்டமாக ஆர்டர் வைத்திருப்பது பெரும் சாதனையாகும். இது சாதாரண கண்காணிப்பு ட்ரோனாக இல்லாமல், நேரடி தாக்குதல்களுக்கும் வடிவமைக்கப்பட்ட தொழில்நுட்ப சாதனமாகும்.

Gati ட்ரோனின் முக்கிய சிறப்பம்சம், இது சீராகக் குறிவைக்கப்பட்ட இலக்குகள் மீது கையெறி குண்டுகளைக் கொண்டு துல்லியமாக தாக்குதல் நடத்தக்கூடியது. அதுமட்டுமல்லாமல், அந்த குண்டுகளை வெடிக்கும் வரை தானாகவே pin அகற்றி, லிவர் ரிலீஸ் செய்வதன் மூலம் முழு செயல்முறையையும் தானியக்கமாக்குகிறது. தாக்குதலுக்குப் பிறகு, ட்ரோன் பாதுகாப்பாக திரும்பி வரும் வசதியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது இந்த சாதனத்தின் மிகச் சிறந்த அம்சமாகும்.
இதன் எடை வெறும் 2.5 கிலோ கிராம். 500 மீட்டர் உயரத்தில் 7.5 கிலோமீட்டர் வரை பறக்கும் திறனும் உண்டு. இந்திய ராணுவத்தால் நடத்தப்பட்ட போக்ரான் சோதனையில் Gati தனது செயல்திறனை நிரூபித்துவிட்டது. இதற்குப் பின்னணியாக “ஆபரேஷன் சிந்தூர்” நடவடிக்கையின்போது, தாக்குதல் முடிந்தபின் படைவீரர்கள் பாதுகாப்பாக திரும்ப முடியாத சூழல்களைச் சந்தித்த அனுபவம் இருந்ததாக சர்மா தெரிவித்துள்ளார்.
இவ்வாறு மேம்பட்ட ட்ரோன் தொழில்நுட்பம், எதிர்கால இந்திய ராணுவ நடவடிக்கைகளில் உயிர் இழப்புகளைக் குறைத்து, சிக்கலற்ற பாதுகாப்பை வழங்கும் புதிய பரிமாணமாக அமையக்கூடியதென நிபுணர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.