புதுடில்லி : டில்லி தல்காத்ரா மைதானத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடந்த விழாவில், தலைவர் கார்கே பேசுகையில், ‘ஜாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த பிரதமர் மோடி பயப்படுகிறார். ஏனென்றால், ஜாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தினால், ஒவ்வொருவரும் தங்கள் பங்கைக் கேட்க ஆரம்பித்துவிடுவார்கள் என்று அவர் பயப்படுகிறார்.
உண்மையில் நாட்டில் ஒற்றுமை வேண்டும் என்றால், வெறுப்புணர்வை பரப்புவதை நிறுத்த வேண்டும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் எங்களுக்கு வேண்டாம். எங்களுக்கு வாக்குச் சீட்டு மட்டுமே வேண்டும். வாக்குச்சீட்டு முறைக்கு திரும்ப காங்கிரஸ் கட்சியினர் இந்தியா முழுவதும் ஒற்றுமை யாத்திரை நடத்த வேண்டும். பிஜேபியிடம் கூட்டாட்சி தன்மை இல்லை. கோடீஸ்வர தொழிலதிபர் அதானியின் செல்வம் பணயம் வைக்கப்பட்டுள்ள நிலையில், மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுடன் அவருக்கு நிறைய தொடர்பு உள்ளது.
நாம் அனைவரும் ஒன்றாக முன்னேறி அவர்களை ஒதுக்கித் தள்ள வேண்டும். நான் தேர்தலைப் பற்றி பேச விரும்பவில்லை, ஆனால் அனைத்து ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகங்களின் வாக்குகள் வீணாகப் போகிறது என்று நான் உறுதியாகக் கூறுவேன். அவர்கள் அனைவரும் வாக்குச் சீட்டு மூலம் வாக்களிக்க வேண்டும். அவர்கள் சொந்தமாக EVMகளை வைத்திருக்கட்டும். எங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வேண்டாம், வாக்குச் சீட்டு மூலம் வாக்களிக்க வேண்டும்.
அப்போதுதான் அவர்களின் நிலை என்ன, எங்கு நிற்கிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும். இது குறித்து மற்ற அரசியல் கட்சிகளிடமும் பேசுவோம். இதற்கான இயக்கத்தை ராகுல் காந்தி தொடங்க வேண்டும்,” என்றார்.