டெல்லி: தங்கக் கடத்தலில் ஈடுபட்டதாக நடிகை ரன்யா ராவ் கைது செய்யப்பட்டிருப்பது இந்தியாவில் தங்கக் கடத்தல் அதிகரித்துள்ளதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. 2023-24-ல் மட்டும் சுமார் 5,000 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வங்கதேசம், மியான்மர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு தங்கம் கடத்தப்பட்டாலும், துபாயில் இருந்துதான் அதிகளவு தங்கம் கடத்தப்படுகிறது. தங்கம் கடத்தலில் ஈடுபடும் நபருக்கு 3 முதல் 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
சிறைத்தண்டனையுடன், ஒருவருக்கு கடத்தப்படும் தங்கத்தின் மதிப்பை விட 3 மடங்கு அபராதமும் விதிக்கப்படும். இத்தனை கட்டுப்பாடுகளையும் மீறி 2023-24-ல் மட்டும் 4,869 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு 1,922 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இருப்பினும், தங்கத்தின் மீதான இந்தியாவின் வரியும் அதிக அளவில் தங்கம் கடத்தப்படுவதற்கு ஒரு முக்கிய காரணமாகும்.

சென்னையில் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 8,020, துபாயில் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 7,740 ஆக உள்ளது. இதனால், துபாயில் இருந்து குறைந்த விலைக்கு தங்கம் வாங்கி, இந்தியாவில் அதிக விலைக்கு விற்கும் வகையில், தங்கம் கடத்தப்பட்டு வருகிறது. வெளிநாட்டில் இருந்து ஆண் ஒருவர் 20 கிராம் தங்கத்தையும், ஒரு பெண் 40 கிராம் தங்கத்தையும் சுங்க வரி இல்லாமல் இந்தியாவிற்கு கொண்டு வரலாம்.
அதற்கு மேல் தங்கம் கொண்டு வரப்பட்டால், ஒரு கிலோவுக்கு 38 சதவீதம் வரை சுங்க வரி விதிக்கப்படுகிறது. இந்தியாவில் அதிக வரி விதிப்பால் துபாயில் குறைந்த விலையில் கிடைக்கும் தங்கம் கடத்தல் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.