மத்திய பிரதேசத்தில் கோல்ட்ரிப் இருமல் மருந்தை குடித்த 24 குழந்தைகள் உயிரிழந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த மருந்து தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் அருகே உள்ள ஸ்ரீசன் பார்மா நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டது என்பது விசாரணையில் வெளிவந்தது.
மருந்தில் தடைசெய்யப்பட்ட ரசாயனம் கலந்திருந்தது உறுதி செய்யப்பட்டதால், நிறுவன உரிமையாளர் ரங்கநாதன் மீது குற்றச்சாட்டு எழுந்தது. சில நாட்கள் தலைமறைவாக இருந்த அவரை, சென்னை அசோக் நகரில் போலீசார் கைது செய்தனர். சைதாப்பேட்டை நீதிமன்றம் அவருக்கு டிரான்சிட் வாரண்ட் வழங்கியதையடுத்து, அவர் மத்திய பிரதேச போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இந்நிலையில், மத்திய பிரதேசத்தின் சிந்த்வாரா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ரங்கநாதனை 10 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த விசாரணையில் மருந்து தயாரிப்பு முறைகள், விநியோகம் மற்றும் பரிசோதனைக் குறைபாடுகள் குறித்து தீவிரமாக விசாரணை நடைபெறும் என தகவல்.
இந்த வழக்கு நாடு முழுவதும் மருந்து பாதுகாப்பு தரநிலைகளின் மீதான கேள்விகளை எழுப்பியுள்ளது. மக்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட வேண்டுமென சமூக வலைத்தளங்களில் கோரிக்கைகள் எழுந்துள்ளன.