பெங்களூரு: மசோதாக்களை திருப்பி அனுப்புவதால், கர்நாடக கவர்னர் – அரசு இடையிலான மோதல் நாளுக்கு நாள் தீவிரமாகி வருகிறது. பா.ஜ., ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் கவர்னர்கள் மூலம் அரசுகளுக்கு தொல்லை கொடுப்பதாக குற்றச்சாட்டு எழுவது வழக்கமான ஒன்றாக மாறியுள்ளது. தென் மாநிலங்களில் கவர்னர் – அரசு இடையிலான மோதல் அதிகமாக உள்ளது. தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் – கவர்னர் ஆர்.என். ரவி, கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் – முன்னாள் கவர்னர் ஆரீப் முகமது கான் இடையே ஏற்பட்ட மோதல் இதற்குச் சான்றாகும்.
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா – கவர்னர் தாவர்சந்த் கெலாட் இடையே தொடக்கத்தில் எந்த பிரச்னையும் இல்லாமல் அமைதியாகச் சென்றுவந்தது. ஆனால், கடந்த ஆண்டு முடா வழக்கில், முதல்வர் மீது கவர்னர் விசாரணைக்கு உத்தரவிட்டதிலிருந்து உரசல் தொடங்கியது. அதுவரை கவர்னரைப் பற்றி எதுவும் பேசாத சித்தராமையா, தன் மீது விசாரணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின், கவர்னர் பா.ஜ.,வின் கைகூலி, ஏஜென்ட் எனக் கடுமையாக விமர்சித்தார். துணை முதல்வர் சிவகுமாரும் அதே போக்கைத் தொடர்ந்தார்.
இதுவரை அமைதியாக இருந்த கவர்னர் கெலாட், அதற்கு பதிலடி கொடுப்பது போல் தன்னுடைய அதிகாரங்களை பூரணமாக பயன்படுத்தத் தொடங்கினார். வினாத்தாளை கசிய விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்ட கர்நாடக பொது தேர்வு மசோதா 2023, கர்நாடக நகராட்சிகள் திருத்த மசோதா 2024, நகராட்சி திட்டமிடல் மசோதா 2024 உள்ளிட்ட சட்டமசோதாக்கள் கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டன.
மேலும், கர்நாடக மத நிறுவனங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் திருத்த சட்டம் 2024, கர்நாடக கூட்டுறவு சங்கங்கள் திருத்த சட்டம் 2024, மைசூரு வளர்ச்சி ஆணைய சட்ட மசோதா 2024 உட்பட சில முக்கிய மசோதாக்கள் அனுப்பப்பட்டன. ஆனால், அவற்றில் பலவற்றை கவர்னர் திருப்பி அனுப்பினார். இந்த நடவடிக்கை அரசுக்கும், கவர்னருக்கும் இடையிலான மோதலை மேலும் தீவிரப்படுத்தியது.
சமீபத்தில் நிதி நிறுவனங்கள் மக்களுக்கு தொல்லை கொடுப்பதை தடுக்கும் வகையிலான மசோதாவும் அனுப்பப்பட்டது. அதையும் கவர்னர் முதலில் திருப்பி அனுப்பினார். பின்னர், குறைகள் நிவர்த்தி செய்யப்பட்ட பிறகு ஒப்புதல் அளித்தார்.
தற்போது, பல்கலைக்கழக வேந்தராக முதல்வரை நியமிக்கும் சட்ட மசோதா மற்றும் கிராம பஞ்சாயத்து ராஜ் துறையைச் சார்ந்த ஒரு மசோதா அனுப்பப்பட்ட நிலையில், கவர்னர் அவற்றையும் திருப்பி அனுப்பிவிட்டார்.
இந்த நடவடிக்கையால் கர்நாடக காங்கிரஸ் அரசு கடுமையாக எதிர்வினை தெரிவித்துள்ளது. கவர்னர் – அரசு இடையிலான ஒற்றுமையின்மை, மாநில மக்களுக்கு மட்டுமே பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், இருவரும் சமரச மனப்பாங்குடன் செயல்பட வேண்டும் என நடுநிலையாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.