சென்னை: முதுநிலை மருத்துவப் படிப்புகளில் அரசு இடஒதுக்கீட்டில் சேருபவர்களுக்கு 10 துறைகள் மட்டுமே வழங்கப்படும் என்ற அரசாணையை தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை கிடப்பில் போட்டுள்ளது. முதுநிலை மருத்துவப் படிப்புகளில், மாநில அரசு ஒதுக்கீட்டில் உள்ள மொத்த இடங்களில், 50 சதவீத இடங்கள், அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் எம்.பி.பி.எஸ்., மருத்துவர்களுக்கு வழங்கப்படுகிறது.
இந்த ஒதுக்கீட்டின் கீழ், அரசு டாக்டர்கள், எம்.டி., – எம்.எஸ்., படிப்புகளில் தங்களுக்கு விருப்பமான துறைகளை தேர்வு செய்து, மீண்டும் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிகின்றனர். அதேசமயம், பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, முதுநிலை மருத்துவப் படிப்புகளில் 50 சதவீத அரசு ஒதுக்கீட்டில் சேர்பவர்களுக்கு குழந்தைகள் நலம்.
மகப்பேறு மருத்துவம், சமூக மருத்துவம், மயக்கவியல் உள்ளிட்ட 10 முதுகலை பாடப்பிரிவுகள் மட்டும் ஒதுக்கப்பட்டு அதில் ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம் என மக்கள் நல்வாழ்வுத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.இதனால் காது-மூக்கு-தொண்டை, தோல், கண், மனநலம், சர்க்கரை நோய் அவசர மருத்துவம் உள்ளிட்ட 20 பிரிவுகளில் சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு, டாக்டர்கள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், அரசு ஒதுக்கீட்டில் 10 துறைகள் மட்டுமே சேர முடியும் என்ற அரசாணை 151ஐ மறு உத்தரவு வரும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைத்து மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர் சுப்ரியா சாஹு உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த அரசாணையை நிறுத்தி வைத்த மக்கள் நலத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் உள்ளிட்டோருக்கு அரசு டாக்டர்கள் மற்றும் பட்டதாரி டாக்டர்கள் சங்க செயலாளர் ராமலிங்கம் நன்றி தெரிவித்துள்ளார்.