ஜெய்சல்மர்: ஜிஎஸ்டி கவுன்சிலின் 55-வது கூட்டம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மரில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி, கோவா, ஹரியானா, ஜம்மு காஷ்மீர், மேகாலயா, ஒடிசா மாநில முதல்வர்கள், தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் பல்வேறு மாநில நிதியமைச்சர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்திற்கு பிறகு நிர்மலா சீதாராமன் நிருபர்களிடம் கூறியதாவது:- செறிவூட்டப்பட்ட அரிசி மீதான வரி 18-ல் இருந்து 5% ஆக குறைக்கப்படும். மரபணு சிகிச்சைக்கு முற்றிலும் வரி விலக்கு அளிக்கப்படும். பாதுகாப்புத் துறையில், தரையிலிருந்து வான் ஏவுகணை அமைப்புகளுக்கான உபகரணங்கள் மற்றும் மென்பொருள்களுக்கு வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும். பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களால் விற்கப்படும் பழைய எலக்ட்ரிக் மற்றும் சிறிய (1,200 சிசிக்கு கீழ்) பெட்ரோல் மற்றும் டீசல் கார்களுக்கான வரி 12-ல் இருந்து 18 சதவீதமாக அதிகரிக்கப்படும்.
பழைய கார்கள் விற்பனையில் கிடைக்கும் லாபத்தில் மட்டுமே இந்த வரி விதிக்கப்படும். 1,200 சிசிக்கு மேல் உள்ள கார்களுக்கு ஏற்கனவே 18% வரி விதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், தனிநபர்களிடையே விற்கப்படும் கார்களுக்கு இது பொருந்தாது. 50% சாம்பலைக் கொண்டு தயாரிக்கப்படும் ஏசிசி பிளாக்குகளுக்கான வரி 18-ல் இருந்து 12% ஆக குறைக்கப்படும். விமான எரிபொருளை (ஏடிஎஃப்) ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டுவர மாநில அரசுகள் விரும்பவில்லை.
எனவே, இது குறித்தும், உணவுப் பொருட்களை விநியோகம் செய்யும் செயலிகளுக்கு வரி விதிப்பது குறித்தும் இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை. ஆயுள் மற்றும் உடல்நலக் காப்பீட்டு பிரீமியத்திற்கான வரி விலக்கு அல்லது வரி குறைப்பு தொடர்பாக காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐஆர்டிஏ) உள்ளிட்ட அமைப்புகளின் கருத்துக்காக காத்திருக்கிறோம். எனவே, இது குறித்த முடிவு ஒத்திவைக்கப்பட்டுள்ளது, என்றார்.