மும்பை: முன்னணி கிரிப்டோகரன்சி தளத்தை ஹேக்கர்கள் ‘திடீர்’ என முடக்கினர். இதனால் ரூ.368 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
மும்பையை தளமாக கொண்ட இந்தியாவின் முன்னணி கிரிப்டோகரன்சி பரிவர்த்தனை தளமான காயின்டிசிஎக்ஸ் தளத்தை ஹேக்கர்கள் முடக்கினர். இதனால் இந்திய ரூபாய் மதிப்பில் ரு.368 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அந்த நிறுவனம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-
வாடிக்கையாளர்களின் சொத்துக்கள் பாதுகாப்பாக உள்ளது. இழப்புகள் உரிய முறையில் சரி செய்யப்படும். வாடிக்கையாளர்கள் தங்களின் சொத்துக்களை சேமிக்க பயன்படுத்தப்படும் வாலட்கள் பாதிக்கப்பட வில்லை. அதிநவீன சர்வரில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக தளம் ஹேக் செய்யப்பட்டுள்ளது. நிறுவனத்தின் கருவூல நிதி மூலதனம் ஆரோக்கியமாக இருப்பதால் இழப்பை ஈடு செய்ய முடியும்.
எனவே அச்சமடைந்து உங்கள் முதலீடுகள் அனைத்தையும் விற்பனை செய்ய வேண்டாம். இது தேவையற்ற நஷ்டத்தை ஏற்படுத்தும். சந்தைகள் இயல்பு நிலைக்கு வரட்டும். அமைதியாக இருங்கள். இந்த சம்பவத்தை பெரியதாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை.
ஹேக் செய்யப்பட்ட நிதியை மீட்டு கொண்டு வருவது தொடர்பாக அனைத்து நடவடிக்கைகளையும் தீவிரமாக எடுத்து வருகிறோம். எங்களின் முழு உண்மையான விபரங்களை பெறுவதற்கு உரிய வேலைகளை செய்து வருகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து நிறுவனத்தின் உள் பாதுகாப்பு குழு, ஆபரேஷன் குழு, சைபர் பாதுகாப்பு குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.