ஹரியானாவின் ரோஹ்தக்கில் பண்டிட் பகவத் தயாள் சர்மா மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் செயல்படுகிறது. இது ஹரியானா அரசின் கீழ் செயல்படும் ஒரு மருத்துவக் கல்லூரி. இந்த மருத்துவக் கல்லூரியின் எம்பிபிஎஸ் செமஸ்டர் தேர்வில் நடந்த முறைகேடுகள் குறித்த வீடியோ ஆதாரத்தை ஒரு மாணவர் சமீபத்தில் சமூக ஊடகங்களில் வெளியிட்டார்.
இந்த வீடியோ வைரலானதை அடுத்து, ரோஹ்தக் நகர காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. பண்டிட் பகவத் தயாள் சர்மா மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் சில ஊழியர்கள் எம்பிபிஎஸ் செமஸ்டர் தேர்வில் முறைகேடுகள் செய்துள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. இதன்படி, சில மாணவர்கள் அழுகும் மை பயன்படுத்தி செமஸ்டர் தேர்வை எழுதியுள்ளனர். தேர்வு எழுதிய சில மணி நேரங்களுக்குள் மை அழிக்கப்படுகிறது.
செமஸ்டர் தேர்வுக்குப் பிறகு, விடைத்தாள்கள் ஒரு குறிப்பிட்ட ஊழியரின் வீட்டிற்கு சட்டவிரோதமாக எடுத்துச் செல்லப்பட்டன. மருத்துவ மாணவர்கள் ஊழியரின் வீட்டிற்குச் சென்று பாடப்புத்தகங்களின் உதவியுடன் தங்கள் விடைத்தாள்களில் சரியான பதில்களை எழுதினர். இவ்வாறு, ஒரு பாடத்திற்கு தேர்வு எழுத ரூ. 3 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரை பணம் பெறப்பட்டது. இது தொடர்பாக வீடியோ ஆதாரங்கள் வெளியானதைத் தொடர்ந்து, வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
இந்த விவகாரத்தில் பண்டிட் பகவத் தயாள் சர்மா மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் ரோஷன் லால் மற்றும் ரோஹித் ஆகிய இருவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய தீபக், இந்து மற்றும் ரிது ஆகியோரும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
நீட் நுழைவுத் தேர்வு மற்றும் பிற மருத்துவ நுழைவுத் தேர்வுகளில் அவர்கள் முறைகேடுகள் செய்ததாக புகார்கள் வந்துள்ளன. இது குறித்தும் நாங்கள் விசாரணை நடத்தி வருகிறோம். ஹரியானாவில் உள்ள வேறு சில தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் செமஸ்டர் தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாகவும் விசாரணை நடந்து வருகிறது. போலீஸ் வட்டாரங்கள் இதைத் தெரிவித்துள்ளன.