புதுடெல்லி: மத்திய நிதி அமைச்சகம் மாதாந்திர ஜிஎஸ்டி வருவாய் விவரங்களை வெளியிடுவதை நிறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
ஜூலை 2017 இல் ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, மத்திய நிதி அமைச்சகம் மாதாந்திர ஜிஎஸ்டி வருவாய் தரவை அடுத்த மாதத்தின் முதல் நாளில் வெளியிட்டு வருகிறது.
இதன் அடிப்படையில் கடந்த ஜூன் மாதத்துக்கான ஜிஎஸ்டி மற்றும் வருவாய் விவரங்கள் நேற்றுமுன்தினம் வெளியிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இது குறித்து அமைச்சகத்திடம் இருந்து எந்த தகவலும் இல்லை. அதற்கு பதிலாக, ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்ட ஏழு ஆண்டுகளைக் கொண்டாடும் வகையில் அதன் சமூக ஊடகப் பக்கங்களில் பல்வேறு இடுகைகளை வெளியிட்டுள்ளது.
இதையடுத்து, ஜிஎஸ்டி வருவாய் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகாத நிலையில், கடந்த மாதம் ஜிஎஸ்டி வருவாய் 1.74 லட்சம் கோடி ரூபாயாக இருந்ததாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த ஆண்டு ஜிஎஸ்டி வருவாய் ரூ.1.61 லட்சம் கோடியுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு ஜூன் மாத ஜிஎஸ்டி வருவாய் 7.74 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் இதுவே குறைந்த ஜிஎஸ்டி வருவாய் வளர்ச்சி விகிதம் ஆகும்.
இந்நிலையில், ஜி.எஸ்.டி., வருவாய் தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்களை அரசு வெளியிடாதது ஆச்சரியம் அளிப்பதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அரசின் தரவுகள் இல்லாத பட்சத்தில், நாட்டின் பொருளாதார நிலை மற்றும் செயல்பாடுகள் குறித்த தெளிவான பார்வை கிடைக்காது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.