கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கிய அமர்நாத் யாத்திரை தற்போது கனமழை காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஜூன் 29 ஆம் தேதி தொடங்கிய அமர்நாத் யாத்திரையில் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் செல்கின்றனர். ஒன்றரை லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
அமர்நாத் கோவிலுக்கு செல்லும் வழியில் கனமழை பெய்து வருவதாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நேற்று காலை ஜம்முவில் இருந்து 5000க்கும் மேற்பட்ட யாத்ரீகர்கள் புனித யாத்திரை சென்றதாகவும், சிலர் பாரம்பரிய பாதை வழியாக செல்ல திட்டமிட்டிருந்த வேளையில், அப்பகுதியில் கனமழை பெய்ததால், இடையில் நிறுத்தி பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு காஷ்மீரின் இமயமலைப் பகுதியில் 3,800 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள அமர்நாத் குகைக் கோயிலில் ஒவ்வொரு மாதமும் ஜூன் மாத இறுதியில் பனி வடிவில் சிவலிங்கம் காட்சியளிக்கிறது. இந்த பனிலிங்கத்தை தரிசனம் செய்வதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரை செல்வது வழக்கம், இந்த ஆண்டும் யாத்திரை தொடங்கியது.
ஆனால் யாத்திரை தொடங்கிய சில நாட்களிலேயே கனமழை காரணமாக யாத்திரை நிறுத்தப்பட்டது. இருப்பினும் இன்னும் சில நாட்களில் மழை ஓய்ந்த பிறகு யாத்திரை தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், பாதயாத்திரை செல்லும் வழியில் கனமழையில் சிக்கி தவிக்கும் பக்தர்களுக்கு தேவையான உணவு மற்றும் மருத்துவ பொருட்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.