மும்பை: மும்பையில் ஒரே நாளில் 30 செ.மீ. கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில், அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. மும்பையில் நேற்று 30 செ.மீ. மீட்டர் மழை பெய்தது. கடந்த 2005ம் ஆண்டுக்கு பிறகு பெய்த இரண்டாவது கனமழை இதுவாகும்.இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கனமழை காரணமாக மும்பை விமான நிலையத்தில் 50க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
பல விமானங்கள் இந்தூர், ஹைதராபாத், அகமதாபாத் போன்ற இடங்களுக்கு திருப்பி விடப்பட்டன. கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. வாகன போக்குவரத்து ஸ்தம்பித்தது. இந்நிலையில், மும்பையில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு மத்திய மற்றும் வடமேற்கு வங்கக்கடல், வட ஆந்திரா கடற்கரை, கொங்கன், கோவா, மத்திய மகாராஷ்டிரா, குஜராத், கேரளா, மாஹே, ஏனாம் மற்றும் கர்நாடகாவின் உள்பகுதிகளில் உருவாகியுள்ள புயல் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 3 நாட்களுக்கு மிக கனமழை பெய்யும். மும்பை, தானே, பால்கர் மற்றும் கொங்கனுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
மழையால் மும்பை வர்த்தக ரீதியாக பாதிக்கப்படவில்லை. ஹெச்டிஎப்சி வங்கியின் தலைமைப் பொருளாதார நிபுணர் சாக்ஷி குப்தா கூறுகையில், ‘கொரோனா தொற்றுநோய்க்குப் பிறகு வங்கிகள் உட்பட பல சேவைகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன, எனவே வணிக நிறுவனங்கள் பாதிக்கப்படவில்லை.