மும்பை: மகாராஷ்டிரா மற்றும் மும்பையில் கனமழை முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதுகுறித்து, வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மகாராஷ்டிராவின் வட மத்திய பகுதியில் புயல் உருவாகியுள்ளது.
இதன் காரணமாக வரும் நாட்களில் மகாராஷ்டிராவில் மழை பெய்யும். மும்பையின் பல பகுதிகளில் இன்று (செப்டம்பர் 27) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும், நாசிக் நகருக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. பால்கர், புனே, நன்துர்பார் மற்றும் துலே பகுதிகளுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், மகாராஷ்டிராவில் உள்ள அனைத்து நகரங்களுக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேபோல், பிர்ஹம் மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் இன்று மும்பையில் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் நகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் மிதமான முதல் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் கணித்துள்ளது.
மத்திய மகாராஷ்டிராவுடன் கொங்கன் மற்றும் கோவா பகுதிகளில் வாரம் முழுவதும் பரவலாக மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் சில பகுதிகளில் 12 செ.மீ மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், மத்திய மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தின் பல பகுதிகளில் செப்டம்பர் 28 அன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. எனவே பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே இருந்து மழைக்கு தயாராகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இதேபோல், தெற்கு குஜராத் மற்றும் கொங்கன் மற்றும் கோவாவின் கடலோர பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு நீர்நிலைகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனமழையின் போது அத்தியாவசிய தேவைகளை தவிர மக்கள் வெளியே வரவேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். உள்ளூர் அதிகாரிகள் நிலைமையை கண்காணித்து வருவதாகவும், வெள்ளத்தால் ஏற்படும் எந்த அவசரத்தையும் சமாளிக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே கடந்த 25-ம் தேதி மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையால் நகரின் பல பகுதிகள் தண்ணீரில் மூழ்கின. செப்டம்பர் மாதம் மும்பையில் பெய்த மழை மாத சராசரியான 350 மில்லி மீட்டரைத் தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.