மும்பை மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக மும்பையில் மழை கொட்டி தீர்த்த நிலையில், கொலாபாவில் 12 செ.மீ. மழைவும், சாண்டா க்ரூசில் 9 செ.மீ. மழைவும் பதிவாகியுள்ளது. சில இடங்களில் 5 மணி நேரத்தில் 5 செ.மீ. மழை பெய்ததால், முக்கிய சாலைகள் வெள்ளத்தில் மூழ்கின. மாநகராட்சி ஊழியர்கள் உடனடியாக தேங்கிய நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

ஹிண்ட்மாதா, காந்தி மார்க்கெட், சுனாபட்டி, மலாட், தஹிசர் மற்றும் மன்குர்ட் சுரங்கப்பாதைகளில் அதிக அளவு நீர் தேங்கி, போக்குவரத்து சீர்குலைந்தது. பல இடங்களில் பம்பு அமைப்புகள் மூலம் தண்ணீர் அகற்றப்பட்டது. தானே, பால்கர், ராய்காட் உள்ளிட்ட பகுதிகளிலும் அதேபோல கனமழை கொட்டி தீர்த்ததால், அடுத்த 48 மணி நேரத்திற்கும் வானிலை ஆய்வு மையம் ரெட் அலெர்ட் அறிவித்துள்ளது.
மாநிலம் முழுவதும் பெய்த கனமழை காரணமாக 10 பேர் உயிரிழந்துள்ளனர். வெள்ளம் மற்றும் நிலச்சரிவு அச்சம் காரணமாக சுமார் 11,800க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். ஆற்றங்கரை கோவில்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால், பக்தர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். மீட்புப் படையினர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.
மாநில முதல்வர் பட்னவிஸ், வெள்ளம் தாக்கம் அதிகம் உள்ள பகுதிகளை ஆய்வு செய்து, உடனடி மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், பொதுமக்கள் அவசியமில்லாமல் வீடுகளை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இயற்கை சீற்றத்தால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகிய மஹாராஷ்டிரா மக்களுக்கு அரசு அனைத்து உதவிகளையும் அளிக்கும் என்று அவர் உறுதியளித்தார்.