கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களின் நிலைமையை ஆய்வு செய்ய இரு மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி ஆகியோரிடம் தொலைபேசியில் பேசிய அவர், மாநிலங்களில் நிலவும் பிரச்னைகள் குறித்து கேட்டறிந்தார்.
மாநிலத்தில் ஏற்பட்டுள்ள சொத்து சேதம் மற்றும் வெள்ள சேதம் குறித்து பிரதமரிடம் முதல்வர் ரேவந்த் ரெட்டி விளக்கினார். இதனிடையே ஆந்திராவில் மழையால் ஏற்பட்ட இழப்புகள், சேதங்கள் மற்றும் அவசரகால நடவடிக்கைகள் குறித்த விவரங்களையும் பிரதமரிடம் சந்திரபாபு நாயுடு பகிர்ந்து கொண்டார்.
இரு மாநிலங்களின் நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து, மத்திய அரசின் முழு ஆதரவையும் பிரதமர் உறுதியளித்தார். மேலும், மாநில மக்களின் பாதுகாப்பு மற்றும் சேவை நடவடிக்கைகள் தொடர்பாக அவசர உதவிகளை வழங்க ஹெலிகாப்டர்கள் அனுப்பப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
மழை காரணமாக ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பள்ளிகளுக்கு திங்கள்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் பாதுகாப்புக்காக, மாநில அரசு உரிய நடவடிக்கை எடுத்துள்ளது.
இரு மாநில அரசுகளையும் பிரதமர் மோடி பாராட்டினார். மழை, வெள்ளம் தொடர்பான பிரச்னைகளுக்கு மத்திய அரசு முழு உதவி செய்யும் என்று உறுதியளித்தார்.