தலைநகர் டில்லியில் கடந்த சில நாட்களாக இடியுடன் கூடிய கனமழை கொட்டி வருகிறது. சாஸ்திரி பவன், ஆர்கே புரம், மோதி பாக், கித்வாய் நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் மழை வெள்ளம் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. பல இடங்களில் தண்ணீர் தேங்கி வாகன போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்திய வானிலை ஆய்வு மையம், இன்று (ஆகஸ்ட் 9) டில்லி முழுவதும் ரெட் அலர்ட் எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.

மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக விமான போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. டில்லி சர்வதேச விமான நிலையத்தில் 13 விமானங்கள் தரையிறங்குவதில் தாமதம் ஏற்பட்டது. மேலும், 92 விமானங்கள் மற்ற நகரங்களில் இருந்து டில்லி வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மொத்தம் 105 விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் பல மணி நேரம் விமான நிலையங்களில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
டில்லி விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்ததாவது, இந்திய வானிலை ஆய்வு மையத்தின் முன்னறிவிப்பின்படி டில்லியில் மோசமான வானிலை நிலவி வருகிறதாம். இருப்பினும் அனைத்து விமான நடவடிக்கைகளும் இயல்பாக இருக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பயணிகள் சிரமம் அடையாமல் இருக்க எங்கள் குழுக்கள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றன என்றும் அவர்கள் கூறினர்.
மொத்தத்தில், கனமழை தலைநகர் டில்லியின் அன்றாட வாழ்க்கையையும், போக்குவரத்து சேவைகளையும் கடுமையாக பாதித்துள்ளது. விமான தாமதங்களால் ஆயிரக்கணக்கான பயணிகள் சிரமப்பட்டு வருகின்றனர். வானிலை மேம்பட்ட பிறகே நிலைமை சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.