கேரளாவின் இடுக்கி மாவட்டம், குறிப்பாக மூணாறு மற்றும் அதனை ஒட்டிய மலையோரப் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், மாவட்டத்தில் ‘ஆரஞ்ச் அலர்ட்’ அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாகவே மழை ஓய்வின்றி பெய்துவரும் சூழ்நிலையில், மாநில வானிலை மையம் 115.6 முதல் 204.4 மில்லி மீட்டர் வரை மழை பெய்யக்கூடும் என எச்சரித்துள்ளது. இதன் காரணமாக, இடுக்கி, மலப்புரம் மற்றும் வயநாடு மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் பருவமழை மே 24ல் தொடங்கி சில தினங்களுக்கு கடுமையாக இருந்தது. அதன் பின் ஒரு வார இடைவெளிக்கு பிறகு மீண்டும் தீவிரமடைந்த மழை, தற்போது இடுக்கி மாவட்டத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தேவிகுளம் தாலுகாவில் 87.2 மி.மீ., தொடுபுழாவில் 16 மி.மீ. மற்றும் மூணாறில் 110.4 மி.மீ. அளவில் கடந்த 24 மணி நேரத்தில் மழை பதிவானது. இந்த மழை நிலச்சரிவுக்கு வழிவகுக்கும் அளவிற்கு உள்ளதால் மக்களிடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது.
மூணாறு அருகே உள்ள மாங்குளம் ஊராட்சியில் பாம்புகயம் ரோடு வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது. இதனால் சில கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டு அங்குள்ள மக்களுக்கு தேவையான உதவிகளை அதிகாரிகள் செய்து வருகின்றனர். மழை தொடரும் பட்சத்தில், மேலும் பாதிப்புகள் ஏற்படும் என்பதால், மாநில பேரிடர் மேலாண்மை துறை முழுமையாக சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறது.
இனிவரும் நாட்களில் கனமழை தொடரும் அபாயம் உள்ளதால், இடுக்கி கலெக்டர் விக்னேஸ்வரி, முன்னெச்சரிக்கையாக அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவித்து உத்தரவு பிறப்பித்துள்ளார். மக்கள் பாதுகாப்பாக இருக்கவும், சாலைகளில் தேவையற்ற பயணம் செய்யவேண்டாமென்றும் மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.