கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஓசூர் நகரம் தொழில் மையமாக விரைவாக வளர்ந்து வருகிறது. இதன் வளர்ச்சியை மேலும் துரிதப்படுத்தும் வகையில், ஓசூரில் சர்வதேச கிரீன்ஃபீல்டு விமான நிலையம் அமைப்பது குறித்து தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இது தொடர்பாக கடந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் கிருஷ்ணகிரி எம்.பி கே.கோபிநாத் கேள்வி எழுப்பினார். மத்திய சிவில் விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் முரளிதர் மோஹோல் எழுத்துப் பூர்வமாக பதில் அளித்துள்ளார்.
அந்த பதிலில், புதிய விமான நிலையங்களை அமைப்பதற்கான GFA Policy 2008 ஐ மத்திய அரசு உருவாக்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதன் கீழ் எந்த மாநில அரசும் அல்லது ஏர்போர்ட் டெவலப்பர் நிறுவனங்களும் புதிதாக விமான நிலையம் அமைக்க திட்டமிட்டால், தகுதியான இடத்தை தேர்வு செய்து அடிப்படை ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். அதன் பிறகு மத்திய அரசிடம் Site Clearance க்கு விண்ணப்பிக்க வேண்டும்.
மத்திய அரசு இதுவரை ஓசூர் விமான நிலையம் அமைப்பதற்கான எந்த விதமான விண்ணப்பமும் பெறவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) மற்றும் தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு கழகம் (TIDCO) இணைந்து செப்டம்பர் 2024-ல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டுள்ளது. இதுவரை 4 இடங்களில் முதல்கட்ட ஆய்வுகள் நடைபெற்றுள்ளன. அதனையடுத்து இடைக்கால ஆய்வு அறிக்கை மாநில அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் தெரிவித்தார்.
இதன் மூலம், ஓசூர் சர்வதேச விமான நிலையத்திற்கான திட்டம் இன்னும் தொடக்க கட்டத்திலேயே இருப்பது உறுதியாகி உள்ளது. தமிழக அரசு மத்திய அரசிடம் விண்ணப்பம் அனுப்பி Site Clearance பெறும் முயற்சிகளை மேற்கொள்வது தேவையான கட்டமாக அமைந்துள்ளது.
இந்த விமான நிலையம் உருவாகும் பட்சத்தில், கொங்கு மண்டலத்தில் உள்ள தொழில் வளர்ச்சி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு இது பெரும் முன்னேற்றமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.