இளைஞர்கள் வாரத்திற்கு 70 மணிநேரம் வேலை செய்ய வேண்டும் என்ற இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தியின் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தற்போது, பிரபல கட்டுமான நிறுவனமான லார்சன் & டூப்ரோ (எல்&டி) தலைவர் எஸ்.என். சுப்பிரமணியனும் இதே கருத்தை தெரிவித்துள்ளார். தனது நிறுவனத்தின் தொழிலாளர்களை உரையாற்றும் போது, ”ஞாயிற்றுக்கிழமைகளில் உங்களை வேலை செய்ய வைக்க முடியாததற்கு நான் வருந்துகிறேன்.
ஞாயிற்றுக்கிழமைகளிலும் உங்களை வேலை செய்ய வைத்தால் நான் மகிழ்ச்சியடைவேன். நாட்டுக்காக வீட்டில் ஓய்வு எடுப்பதால் என்ன பயன்? உங்கள் மனைவியின் முகத்தை எவ்வளவு நேரம் பார்க்கிறீர்கள்? உங்கள் மனைவி உங்கள் முகத்தை எவ்வளவு நேரம் பார்க்கிறார்? அலுவலகத்திற்குச் சென்று வேலை செய்யுங்கள். சீனா வளர்ச்சியடைந்ததற்குக் காரணம் அவர்கள் 90 மணி நேரம் வேலை செய்வதால்தான்.
அமெரிக்கர்கள் 50 மணி நேரம் மட்டுமே வேலை செய்கிறார்கள். விரைவில் சீனா அமெரிக்காவை விஞ்சிவிடும்.” அவரது கருத்து தொழில்துறை மற்றும் தொழிலாளர்கள் மத்தியில் ஆதரவையும் எதிர்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இளைஞர்கள் தற்போது காணும் 48 மணி நேர வேலை வாரம் போதாது என்ற உணர்வு நாராயண மூர்த்தி மற்றும் சுப்பிரமணியன் ஆகியோரின் உரைகளில் பிரதிபலிக்கிறது.
இது குறித்துப் பேசிய தொழிலதிபர் கௌதம் அதானி, “நீங்கள் ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் உங்கள் குடும்பத்துடன் செலவிட்டால், உங்கள் மனைவி வீட்டை விட்டு ஓடிவிடுவாள். வேலை-வாழ்க்கை சமநிலை அனைவருக்கும் வேறுபட்டது. சிலர் 4 மணி நேரம் வீட்டில் இருந்தால் மகிழ்ச்சியாக இருப்பார்கள்; சிலர் 8 மணி நேரம் வீட்டில் இருந்தால் மகிழ்ச்சியாக இருப்பார்கள். உங்கள் விருப்பங்களை என் மீது திணிக்காதீர்கள். வேலை-வாழ்க்கை சமநிலை அவர்களின் சொந்த முடிவாக இருக்க வேண்டும்.” இது சிந்திக்க வேண்டிய ஒரு முக்கியமான கருத்து.
வேலை நேரம் பொதுவாக 48 மணிநேரம் என வரையறுக்கப்பட்டாலும், சில நாடுகள் தங்கள் வசதிக்கேற்ப வேலை நேரத்தை நிர்ணயித்துள்ளன. உலகளாவிய சராசரி 40 முதல் 44 மணிநேரம் வரை. வேலை நேரம் என்பது விவாதத்திற்குரிய விஷயமாக இருந்தாலும், நாட்டின் முன்னேற்றத்திற்கு அவசியமானால் ஆக்கப்பூர்வமாக சிந்தித்து நல்ல முடிவுகளை எடுப்பதில் எந்தத் தவறும் இல்லை. கூடுதல் நேரம் வேலை செய்யத் தயாராக இருக்கும் தொழிலாளர்களை கூடுதல் நேரம் வேலை செய்ய அனுமதிக்கலாம்.
அவர்களின் சம்பளத்திற்கு கூடுதலாக எவ்வளவு ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்பதையும் அவர்களே முடிவு செய்யலாம். தொழில் பிரதிநிதிகள், தொழிலாளர்கள் மற்றும் அரசாங்க பிரதிநிதிகள் ஒன்று கூடி கூடுதல் நேரத்தை முடிவு செய்தால், பொருத்தமான இழப்பீடு, உடல் மற்றும் மன பாதுகாப்பு அம்சங்களுடன் முடிவெடுப்பதில் எந்தத் தவறும் இல்லை. அதே நேரத்தில், சலுகைகளை வழங்குவதில் தொடங்கி படிப்படியாக கூடுதல் நேரத்தை கட்டாயமாக்கும் சூழல் உருவாக்கப்படக்கூடாது.