கர்நாடகா: பெங்களூரு ஏடிஎம் வாகன கொள்ளையில் மூளையாக செயல்பட்ட கான்ஸ்டபிள் உட்பட மூவர் கைது ஆனது எப்படி என்ற பின்னணிதான் இது.
கர்நாடகாவின் பெங்களூருவில் கடந்த நவம்பர் 19-ஆம் தேதி, ஏ.டி.எம்.களுக்குப் பணம் ஏற்றிச் சென்ற CMS Info Systems நிறுவனத்திற்குச் சொந்தமான வாகனத்தை இடைமறித்த கும்பல், துப்பாக்கி முனையில் 7.11 கோடி ரூபாயைக் கொள்ளையடித்துச் சென்றது. இந்த வழக்கை துப்பு துலக்கிய பெங்களூரு காவல்துறை ஐதராபாத்தில் வைத்து, கான்ஸ்டபிள் ஒருவர் உட்பட மூன்று பேரை கைது செய்துள்ளது.
கைதுசெய்யப்பட்டவர்களில் அன்னப்பா நாயக், பெங்களூரு கிழக்கு கோவிந்தபுரா காவல் நிலையத்தைச் சேர்ந்த போலீஸ் கான்ஸ்டபிள் ஆவார். சேவியர் CMS Info Systems நிறுவனத்தின் ஊழியர் ஆவார். மூன்றாவது நபர் கோபி பிரசாத், கொள்ளையடிக்கப்பட்ட வாகனத்தின் வழித்தடத்தை டிராக் செய்வதில் பங்காற்றியவர் ஆவார் என காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த வழக்கில் கொள்ளைக்கு மூளையாக செயல்பட்ட முக்கிய குற்றவாளி கான்ஸ்டபிள் அன்னப்பா நாயக் என்பது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. தான் ஒரு போலீஸ் என்பதால் போலீசிடம் சிக்காமல் கொள்ளையடிப்பதற்கான நுணுக்கங்களை அவரே தனது கூட்டாளிகளுக்கு சொல்லிக்கொடுத்துள்ளார்.
கொள்ளை நடந்த தினத்தன்று, நகரின் தெற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் போலீசார் பல சோதனைச் சாவடிகளை அமைத்து வாகனங்களைச் சோதனையிட்டனர். அன்னப்பா நாயக் அங்கு பணியில் இல்லாதபோதும், அவர் ஒரு சோதனைச் சாவடிக்கு வந்துள்ளார். அங்குப் பணியில் இருந்த தலைமை காவலரை அணுகிய அவர், கொள்ளை குறித்து விசாரிக்கத் தொடங்கியுள்ளார்.
கொள்ளையர்கள் தப்பிச் செல்லப் பயன்படுத்திய வாகனத்தைக் கண்டுபிடித்துவிட்டார்களா என்று குறிப்பாகக் கேட்டுள்ளார். மேலும், இணையத்தில் பரவிய ஒரு புகைப்படத்தைக் காட்டி அது உண்மையானதா என்றும் கேட்டுள்ளார். அதே இடத்தில் இருந்தபடி வயர்லெஸ் தகவல் தொடர்புகளையும் அவர் கண்காணித்துள்ளார். இது சந்தேகத்தை ஏற்படுத்தியது. வேறு ஒரு காவல் நிலையத்தைச் சேர்ந்த அதிகாரி இங்கு வந்து ஏன் இவ்வளவு ஆர்வம் காட்ட வேண்டும் என்று தலைமை காவலர் சந்தேகம் அடைந்தார்.
இது குறித்து மேலதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அவரது நடவடிக்கைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, பின்னர் அவர் விசாரணைக்காகக் காவலில் எடுக்கப்பட்டார். தீவிர விசாரணையில், கொள்ளையில் தனக்கு இருந்த பங்கை அன்னப்பா ஒப்புக்கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் சேவியருடன் அவருக்கு இருந்த தொடர்புகளை அவரது செல்போன் அழைப்புகள் உறுதிப்படுத்தின.
தற்போது, அன்னப்பா நாயக் மற்றும் இரு குற்றவாளிகள் பத்து நாட்கள் காவல் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.