ஹைதராபாத் நகரத்திலிருந்து எத்தியோப்பியா தலைநகர் அடிஸ் அபபாவுக்கு நேரடி விமான சேவை நேற்று துவக்கப்பட்டது. கிழக்கு ஆப்பிரிக்காவை நோக்கி தெலுங்கானா மாநிலத்திலிருந்து இதுவே முதல் நேரடி விமான சேவையாகும். இந்தச் சேவை துவங்கியதைக் குறிக்கும் வகையில் ஹைதராபாத் ராஜீவ் சர்வதேச விமான நிலையத்தில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் ஜி.எம்.ஆர் ஹைதராபாத் சர்வதேச விமான நிலையத்தின் உயரதிகாரிகள் மற்றும் எத்தியோப்பிய ஏர்லைன்ஸ் நிர்வாகிகள் பங்கேற்றனர். அவர்கள் முன்னிலையில், ஹைதராபாதில் இருந்து எத்தியோப்பிய ஏர்லைன்ஸ் விமானம் அடிஸ் அபபா நோக்கி புறப்பட்டது. இது இரண்டு நாடுகளுக்கும் இடையே நேரடி தொடர்பை உருவாக்கும் முக்கியமான முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.
இந்த சேவையின் படி, ஹைதராபாதிலிருந்து செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் விமானம் இயக்கப்படும். அதேபோல், அடிஸ் அபபாவிலிருந்து திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் விமானம் திரும்பும். ஒரு பயணத்திற்கு சுமார் 6 மணி 25 நிமிடங்கள் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்னிந்தியாவிலிருந்து ஆப்பிரிக்காவுக்கு நேரடி விமான சேவை அளிக்கப்படுவதால், வர்த்தகம், பயணம் மற்றும் கலாச்சார பரிமாற்றம் ஆகியவை மேலும் வலுப்பெறும் என ஜி.எம்.ஆர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பிரதீப் பணிக்கர் கூறினார். இந்த புதிய சேவை, இருநாடுகளுக்கும் இடையே உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.