கர்நாடகா: மக்களால் பரவலாகப் பயன்படுத்தப்படும் SBI வங்கியில் சமீபத்தில் மொழிப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள சந்தபுரா SBI வங்கி கிளையில் ஒரு வாடிக்கையாளர் கன்னடத்தில் பேசினார். கிளை மேலாளர் இந்தியில் பதிலளித்தார். பின்னர் வாடிக்கையாளர் இது கர்நாடகா என்றும், நீங்கள் எங்கள் மொழியில் பேச வேண்டும் என்றும் கூறினார், அதற்கு வங்கி மேலாளர் நான் ஒருபோதும் கன்னடத்தில் பேச மாட்டேன், இந்தியில் மட்டுமே பேசுவேன் என்றும் கூறினார்.

இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. இந்த சூழ்நிலையில், கர்நாடக முதல்வர் சித்தராமையா இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:- கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் பேச மறுத்து மக்களை புறக்கணித்த SBI வங்கி மேலாளரின் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்கக்கூடாது. அனைத்து வங்கி ஊழியர்களும் மக்களை கண்ணியத்துடன் அணுகி, மாநில மொழியில் பேச முயற்சிக்க வேண்டும். மத்திய நிதி அமைச்சகம், வங்கி ஊழியர்களுக்கு மாநில கலாச்சாரம் மற்றும் மொழியை மதிக்க விழிப்புணர்வு வகுப்புகளை நடத்த வேண்டும் என்றார்.