ஹிசார்: ஹரியானா மாநிலம் ஹிசார் விமான நிலையத்தில் புதிய முனையத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் அடிக்கல் நாட்டினார். அம்பேத்கர் பிறந்தநாள் விழாவில் அவர் பேசியதாவது:- மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கக் கூடாது என்று பாபாசாகேப் பீம்ராவ் அம்பேத்கர் வலியுறுத்தினார். நமது அரசியலமைப்புச் சட்டமும் இதைத் தடை செய்கிறது. ஆனால் கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசு மத அடிப்படையில் இடஒதுக்கீடு அளித்துள்ளது.
இதற்காக எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினரின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. மத்தியில் காங்கிரஸ் ஆட்சி செய்தபோது, ஒரு சில அடிப்படைவாதிகளை மட்டும் திருப்திபடுத்தும் வகையில் கொள்கைகளை வகுத்தது. அதே சமயம் மற்ற முஸ்லிம் சமூகம் புறக்கணிக்கப்பட்டது. அவர்களுக்கு போதிய கல்வி வழங்க நடவடிக்கை எடுக்காததால் ஏழைகளாகவே உள்ளனர். 2014 லோக்சபா பொதுத்தேர்தலில் வெற்றி பெறுவதற்காக, 2013 வரை அமலில் இருந்த வக்ஃப் சட்டம், அடிப்படைவாதிகளுக்கு ஆதரவாக திருத்தப்பட்டதுதான் இதற்கு மிகப்பெரிய சான்று.

வாக்கு வங்கி அரசியலுக்காக தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன் இந்தத் திருத்தம் செய்யப்பட்டது. இது அம்பேத்கர் வடிவமைத்த அரசியலமைப்பை மீறும் செயல். இது அவருக்குப் பெரும் அவமானம். முஸ்லிம்களின் நலனில் அக்கறை உள்ளதாக காங்கிரஸ் கூறுகிறது. அப்படியானால் கட்சியின் தலைவராக முஸ்லிம் ஒருவரை நியமிக்க வேண்டும். அதை ஏன் செய்வதில்லை? மேலும் முஸ்லீம்கள் மீது அக்கறை இருந்தால், தேர்தலில் அந்த சமூகத்தினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.
ஆனால் அவர்கள் (காங்கிரஸ்) அதை செய்ய மாட்டார்கள். காங்கிரஸ் கட்சியில் இருந்து எதையும் கொடுக்க மாட்டார்கள். ஆனால் பொதுமக்களின் உரிமைகளை பறிப்பார்கள். நாடு முழுவதும் பல லட்சம் ஹெக்டேர் நிலங்களில் வக்பு வாரியம் உள்ளது. அந்த நிலங்களை நேர்மையாகப் பயன்படுத்தியிருந்தால், ஏழை முஸ்லிம்கள், பஸ்மந்தா முஸ்லிம்கள், ஆதரவற்ற பெண்கள், குழந்தைகள் பயன்பெற்றிருக்க முடியும். ஆனால் அது நடக்கவில்லை. இதனால் சைக்கிள் டயர்களில் பஞ்சர் போடும் வேலையை முஸ்லிம் இளைஞர்கள் செய்து வருகின்றனர்.
இதற்கெல்லாம் தீர்வு காண மத்திய அரசு வக்ஃப் சட்டத் திருத்தச் சட்டத்தை இயற்றி நடைமுறைப்படுத்தியுள்ளது. இந்த புதிய சட்டத்தின் மூலம் இனி எந்த பழங்குடியினரின் நிலத்தையும் வக்பு வாரியத்தால் கைப்பற்ற முடியாது. மேலும், ஏழைகள், பஸ்மந்தா முஸ்லிம்கள், விதவை பெண்கள், குழந்தைகள் மற்றும் பிறருக்கு உரிய உரிமைகள் கிடைக்கும். இதுதான் உண்மையான சமூக நீதி. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.