புது தில்லி: கேரளாவின் சுற்றுச்சூழல் ரீதியாக பலவீனமான வயநாடு மாவட்டத்தில் கடந்த ஜூலை 30-ல் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவுகள், காலநிலை மாற்றம் காரணமாக 10 சதவீதம் அதிகமான மழைப்பொழிவால் தூண்டப்பட்டதாக உலகளாவிய விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
இந்தியா, ஸ்வீடன், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த 24 ஆராய்ச்சியாளர்களின் குழு, இரண்டு மாதப் பருவமழை மூலம் மண் மிகுந்த நிலையில் ஒரே நாளில் 140 மி.மீ.க்கும் அதிகமான மழை பெய்துள்ளதாகக் கணிக்கின்றனர். இது பேரழிவுகரமான நிலச்சரிவுகளையும், வெள்ளத்தையும் உருவாக்கி குறைந்தது 231 பேரைப் பாதித்ததாகவும் கூறப்படுகிறது.
வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவின் அபாயம் அதிகமாகவே உள்ளது. நிலச்சரிவுகளை ஏற்படுத்தும் மழைப்பொழிவு கேரளாவில் காலநிலை வெப்பம் அதிகமாக இருப்பதால் கனமழை எதிர்பார்க்கப்படுகிறது என்று செஞ்சிலுவைச் சங்கத்தின் காலநிலை ஆலோசகர் மஜா வால்ல்பெர்க் தெரிவித்தார்.
1850-1900 சராசரியுடன் ஒப்பிடும்போது, உலக வெப்பநிலை இரண்டு டிகிரி செல்சியஸ் உயர்ந்தால், மழையின் தீவிரம் மேலும் நான்கு சதவீதம் அதிகரிக்கும் என்று மாதிரிகள் கணிக்கின்றன. இது இந்தியா மற்றும் வெப்பமயமாதல் உலகில் அதிக மழைப்பொழிவு பற்றிய அறிவியல் சான்றுகளுடன் ஒத்துப்போகின்றது. வெப்பமான வளிமண்டலம் அதிக ஈரப்பதத்தை கொண்டிருப்பதால் அதிக மழைப்பொழிவு ஏற்படுகிறது.
வயநாட்டில் நிலப்பரப்பு, நில பயன்பாட்டு மாற்றங்கள் மற்றும் நிலச்சரிவு அபாயத்திற்கு இடையேயான உறவு, கட்டுமானப் பொருட்களுக்கான குவாரி போன்ற காரணிகள் முறைப்படி விளக்கப்படவில்லை. 1950 மற்றும் 2018 க்கு இடையிலான ஆய்வுகள், காடுகளின் பரப்பில் 62 சதவீதக் குறைப்பு ஏற்பட்டு, தோட்டப் பரப்பு சுமார் 1,800 சதவீதம் அதிகரித்துள்ளதாகக் கூறுகின்றன.
அரபிக்கடல் வெப்பமடைந்து, ஆழமான மேக அமைப்புகளை உருவாக்குவதற்கும், இதன் விளைவாக மிக அதிக மழைப்பொழிவு ஏற்படுவதற்கும் காரணமாக அமைந்துள்ளதாக குசாட் வளிமண்டல ரேடார் ஆராய்ச்சிக்கான மேம்பட்ட மையத்தின் இயக்குநர் எஸ் அபிலாஷ் தெரிவித்துள்ளார்.