இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கும் உலகத்தரம் வாய்ந்த நெடுஞ்சாலைகளை உருவாக்குவதில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (NHAI) தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. இந்த உள்கட்டமைப்பு மேம்பாடுகள், சாலை வலையமைப்பை வலுப்படுத்துவதோடு மட்டுமின்றி, நாட்டின் ஒட்டுமொத்த முன்னேற்றத்தையும் அதிகரிக்கும் என்று சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (NHAI) கடந்த 2025 நிதியாண்டில் 5,614 கி.மீ. தேசிய நெடுஞ்சாலைகளை அமைத்து, அதன் இலக்கான 5,150 கி.மீ. தூரத்தை பூர்த்தி செய்துள்ளது. இது இந்தியாவில் சாலை இணைப்புகளை மேம்படுத்துவதற்கான ஆணையத்தின் உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டுகிறது. 2024-25 நிதியாண்டில், நெடுஞ்சாலை மேம்பாட்டுக்கான மொத்த செலவு ரூ.2,50,000 கோடியை எட்டியுள்ளது. இது நிர்ணயிக்கப்பட்ட இலக்கான ரூ.2,40,000 கோடியை விட அதிகமாக உள்ளது.
இந்த செலவு அரசாங்க பட்ஜெட் மற்றும் இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்துக்கு சொந்தமான வளங்களை பயன்படுத்தி திரட்டப்பட்டுள்ளது. 2023-24 நிதியாண்டில் செலவிடப்பட்ட ரூ.2,07,000 கோடியுடன் ஒப்பிடும்போது இந்த நிதியாண்டில் செலவினம் சுமார் 21 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும், 2022-23 நிதியாண்டுடன் ஒப்பிடும்போது இது 45 சதவீதம் அதிகரித்துள்ளது.
தனது பராமரிப்பு மற்றும் கட்டுப்பாட்டில் உள்ள நினைவுச் சின்னங்களை மேம்படுத்த தேவையான நிதியை திரட்டுவதற்காக, NHAI, சுங்கச்சாவடி பரிமாற்றம் (TOT), உள்கட்டமைப்பு முதலீட்டு அறக்கட்டளை (InvIT) மற்றும் சுங்கப் பத்திரமயமாக்கல் ஆகிய மூன்று முறைகளைப் பயன்படுத்தி வருகிறது.
இந்த முயற்சிகளின் மூலம், 2024-25ஆம் நிதியாண்டில் ரூ.28,724 கோடி வருவாயை NHAI ஈட்டியுள்ளது. இதில், ஒரு முக்கிய மைல்கல்லாக, InvIT முறையில் ரூ.17,738 கோடி வருவாயை ஈட்டியுள்ளது. இந்த வருமானம், இந்திய நெடுஞ்சாலைத் துறையின் வரலாற்றில் மிகப்பெரிய வருவாய் அளிக்கும் ஒப்பந்தமாகும்.
மேலும், கடந்த மாதம், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் பிரிவான தேசிய நெடுஞ்சாலைகள் இன்ஃப்ரா டிரஸ்ட் (NHIT), அதன் நான்காவது சுற்று நிதி திரட்டலை வெற்றிகரமாக முடித்தது. இது, நான்கு சுற்றுகளிலும் திரட்டப்பட்ட மொத்த தொகையின் மதிப்பு ரூ.46,000 கோடியைத் தாண்டியுள்ளது.
இந்த முறைகளின் மூலம், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம், உலகளாவிய தரத்தில் நெடுஞ்சாலை அமைப்புகளை உருவாக்கி, இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்தை மேலும் வலுப்படுத்த முடியும்.