புதுடில்லி: இந்திய வாகன சந்தையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு முக்கிய தரவின்படி, பெட்ரோல் கார்களின் விற்பனை பங்குகள், வரலாற்றில் முதல்முறையாக 50 சதவீதத்திற்கும் கீழே சரிந்துள்ளன. இது மின்சார, ஹைபிரிட், சி.என்.ஜி. போன்ற மாற்று எரிபொருள் கார்களுக்கு அதிக அளவில் மக்களின் வரவேற்பை சுட்டிக்காட்டுகிறது.

வாகன முகவர்கள் சங்க கூட்டமைப்பின் (FADA) வெளியீட்டில், கடந்த ஜூன் மாதத்தில் பெட்ரோல் கார்களின் பங்கு 48.2% ஆக குறைந்துள்ளது. இதற்கிடையில், டீசல் கார்கள் சந்தையில் 17.9% பங்கைக் கொண்டுள்ளன. மின்சாரம், கலப்பினம், சிஎன்ஜி, எல்பிஜி போன்ற பல்வேறு வகையான மாற்று எரிபொருள் வாகனங்கள் வேகமாக வளர்ந்து வருகின்றன.
சொல்லப்போனால், 2021ல் சி.என்.ஜி. மற்றும் எல்.பி.ஜி. கார்களின் மொத்த பங்கு 8.5% மட்டுமாக இருந்த நிலையில், தற்போது அது 20.8% என பெரிதும் உயர்ந்துள்ளது. இந்த புள்ளி விவரங்கள் மக்கள் பசுமை வாகனங்களை தேர்வு செய்யும் மாற்றத்தை தெளிவாக காட்டுகிறது.
மின்சார கார்கள் கடந்த சில ஆண்டுகளில் வேகமாக வளர்ந்துள்ளன. டாடா, மஹிந்திரா, எம்.ஜி. போன்ற நிறுவனங்கள் மின்கார் சந்தையில் 87% பங்கு பெற்றுள்ளன. இந்த வளர்ச்சி புள்ளிகள், எதிர்காலத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்கள் சந்தையில் இடம் மெல்ல மாறும் என்கிற நம்பிக்கையை உருவாக்குகின்றன.