புதுடில்லி: கல்வி நிதி தொடர்பான விவகாரத்தில், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானும், தி.மு.க. எம்.பி.,களும் கடும் விவாதத்தில் ஈடுபட்டனர். மத்திய அமைச்சரின் பேச்சு, தி.மு.க. எம்.பி., கனிமொழிக்கு வேதனை அளித்ததாக அவர் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து, தான் கூறிய வார்த்தைகள் புண்படுத்தியிருந்தால், அதை வாபஸ் பெறுவதாக தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.

பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் கட்டம் ஜனவரி 31 அன்று தொடங்கி, பிப்ரவரி 13 அன்று முடிந்தது. இரண்டாம் கட்ட கூட்டத்தொடர் இன்று (மார்ச் 10) தொடங்கியது. இதில், முக்கியமான வக்பு மசோதாவை நிறைவேற்ற மத்தியில் ஆளும் பா.ஜ.க. கடுமையாக முயற்சித்து வருகிறது. இந்த கூட்டத்தொடரில், மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி நிதி பற்றிய கேள்வி தமிழச்சி தங்க பாண்டியன் முன்வைத்தார்.
அவர் கூறியதாவது, “தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை மத்திய அரசு வீணாக்குகிறது. கூட்டாட்சிக்கு எதிராக மத்திய அரசு தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. தமிழகத்தில் கல்வி நிதி வழங்க மத்திய அரசு மறுக்கிறது. இதனால், தமிழகம் துரதிருஷ்டவசமாக தவறாக வழி நடத்தப்படுவதாக” மத்திய அரசை அவர் விமர்சித்தார்.
மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதிலளித்து, “புதிய கல்விக் கொள்கை மூலம் ஹிந்தி திணிக்கப்படுவதாக கூறுவது தவறானது. பா.ஜ. ஆட்சியில் இல்லாத மாநிலங்களிலும் இந்த கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழக அரசு மாணவர்களை தவறாக வழி நடத்தி, அவர்களது எதிர்காலத்தை பாழாக்குகிறது” என்று கூறினார். மேலும், “தமிழக அரசுக்கு புது கல்விக் கொள்கை பற்றி புரிதல் இல்லாத நிலையில், காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்களில் இந்த கொள்கை ஏற்கப்பட்டுள்ளது” என அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், தி.மு.க. எம்.பி., கனிமொழி பிரதானின் பேச்சை கண்டித்து பதிலளித்து, “மும்மொழிக் கொள்கையை தமிழகம் ஏற்காது. தமிழக எம்.பி.,க்களை நாகரீகமற்றவர்கள் என கூறியதற்கு வேதனை அளிக்கிறது” என்று கூறினார்.
பின்னர், “நான் கூறிய வார்த்தைகள் எம்.பி.,களை காயப்படுத்தினால், அதை திரும்ப பெறுகிறேன்” என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.
இதன் பின்னர், லோக்சபாவில் தி.மு.க. எம்.பி.,க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால், அவையில் குழப்பம் நிலவியது. சபாநாயகர் ஓம்பிர்லா, லோக்சபாவை ஒத்திவைத்து, இந்நிலையை கட்டுப்படுத்தியுள்ளார்.
அதேபோல், ராஜ்யசபா கூட்டத்தொடர் காலை 11 மணிக்கு தொடங்கியது. இதில், தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான விவாதம் நடைபெற்றது. இதில் தி.மு.க. எம்.பி.,க்கள், விவாதத்திற்கு எதிராக வெளிநடப்பு செய்தனர்.