பெங்களூரு: கர்நாடக மாநிலத்தின் தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ள தர்மஸ்தலா வழக்கு தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த வழக்கில், வெளிநாடுகளில் இருந்து பணம் வந்தது என்ற குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அமலாக்கத்துறை (ஈ.டி.) நேரடியாக களமிறங்கியுள்ளது. தர்மஸ்தலா குறித்து பொய்யான குற்றச்சாட்டுகளை பரப்பியவர்களுக்கு நிதி உதவி வெளிநாடுகளில் இருந்து வந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளதால், விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

முன்னாள் ஊழியர் சின்னையா தர்மஸ்தலா கோவில் குறித்து தவறான புகார் அளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, யூ-டியூபர் சமீர் தனது சேனலில் ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் மூலம் போலியான படங்களை வெளியிட்டது விவகாரத்தை மேலும் தீவிரப்படுத்தியது. இதனால், தர்மஸ்தலா வழக்கு அரசியல், மத, சமூக ரீதியாக பெரும் விவாதத்துக்குரியதாக மாறியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, பா.ஜ., கட்சி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதி, வெளிநாட்டு பணம் வருகை குறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியுள்ளது. நேத்ராவதி ஆற்றங்கரையில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் எவ்வித ஆதாரங்களும் கிடைக்காததால், பா.ஜ., தர்மஸ்தலா மீது தவறான தகவல்கள் பரப்பப்படுவதாகக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ஈ.டி. விசாரணையின் ஒரு பகுதியாக, மைசூரைச் சேர்ந்த ஒடநாடி மற்றும் சம்வாட் என்ற தொண்டு நிறுவனங்களின் நிதி பரிவர்த்தனைகள் ஆய்வு செய்யப்படுகின்றன. கடந்த ஐந்து ஆண்டுகளில் வெளிநாடுகளில் இருந்து வந்த பணம் எதற்காக பயன்படுத்தப்பட்டது, அந்த நிதி வழியாக தவறான பிரசாரம் நடைபெற்றதா என்பதற்கான விவரங்களை வங்கிகளிடம் கேட்டுள்ளது. குற்றச்சாட்டு உண்மை எனத் தெரிய வந்தால், அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளது.