பாலக்காடு என்பது இலக்கிய மறுமலர்ச்சியின் பிறப்பிடமாகும் என கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார். கேரள மாநிலம் பாலக்காடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே ஐந்து ஏக்கர் பரப்பளவில், 68 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வி.டி. பட்டதிரிப்பாடு நினைவு கலாசார மையம் திறப்பு விழா கடந்த நாளன்று நடைபெற்றது. இந்த விழாவில் கலாசாரம் மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் சஜி செரியான் தலைமை வகித்தார். முதல்வர் விஜயன் கலாசார மையத்தை திறந்து வைத்து உரையாற்றினார்.

தமது உரையில், பாலக்காடு பல புகழ்பெற்ற எழுத்தாளர்களின் பூதவாசஸ்தலமாக விளங்குவதாகவும், இது தமிழும் மலையாளமும் கலந்த செழுமையான பண்பாட்டு நிலப்பரப்பாக இருப்பதாகவும் அவர் கூறினார். வி.டி. பட்டதிரிப்பாடு, ஒளப்பமண்ணா சுப்ரமணியன் நம்பூதிரிப்பாடு, அக்கித்தம் அச்சுதன் நம்பூதிரி, ஒ.வி. விஜயன், எம்.டி. வாசுதேவன் நாயர் ஆகியோர் போன்ற முக்கிய இலக்கிய ஆளுமைகளின் பிறப்பிடம் இந்நகரம் எனும் பெருமை உள்ளது.
வி.டி. பட்டதிரிப்பாடு எழுத்துலகிற்கு அளித்த உழைப்பும், அவர் தனது சொந்த நலன்களைப் புறக்கணித்து சமூக நலனுக்காக செய்த தொண்டும் குறிப்பிடத்தக்கது. அவரை நினைவுகூரும் விதமாக இந்த கலாசார மையம் அமைக்கப்பட்டிருப்பது பெருமையாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த மையம் பாலக்காட்டின் கலாசார வளர்ச்சிக்கு புதிய ஊக்கமாக அமையும். நிலையான சமூக சூழ்நிலைகள் இருந்தாலேயே கலை வளர முடியும். அந்த வகையில் இந்த மையம் முக்கிய பங்கு வகிக்க வேண்டும். இது மாதிரியான கலாசார மையங்களை மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உருவாக்கும் திட்டம் உள்ளதாகவும் முதல்வர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கலால் மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் ராஜேஷ், சட்டமன்ற உறுப்பினர்கள் ராகுல் மாங்கூட்டம், பிரபாகரன், சாந்தகுமாரி, பிரேம்குமார் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீகண்டன், பாலக்காடு மாவட்ட கலெக்டர் பிரியங்கா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.