உலகளவில் விமான பயணம் மேற்கொள்ளும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. குறிப்பாக கோவிட் பிந்தைய காலகட்டத்தில், விமானப் போக்குவரத்தில் ஈடுபடும் பயணிகள் எண்ணிக்கை வளர்ச்சி பெற்று வருகின்றது. இதனை ஒட்டி, விமான நிலையங்களின் தரம், பயணிகள் சேவை, வசதிகள் உள்ளிட்ட அம்சங்களை மதிப்பீடு செய்து தரவரிசை வகுப்பதில் புகழ்பெற்ற ஸ்கைட்ராக்ஸ்
நிறுவனம், 2025-ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த 100 விமான நிலையங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இங்கிலாந்தில் செயல்படும் இந்த நிறுவனம், விமான போக்குவரத்து துறையில் உலகளாவிய தர அளவைகள் மற்றும் பயணிகள் மதிப்பீடுகளை ஆய்வு செய்து ஆண்டுதோறும் இந்த பட்டியலை வெளியிடுகிறது. இந்த ஆண்டுக்கான தரவரிசை பட்டியலில் இந்தியாவில் இருந்து நான்கு முக்கியமான விமான நிலையங்கள் இடம்பிடித்துள்ளன என்பது பெருமைக்குரியது.
இந்திய விமான நிலையங்களில் டில்லி உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் 32வது இடத்தில் இடம்பெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து பெங்களூரு விமான நிலையம் 48வது இடத்திலும், ஐதராபாத் விமான நிலையம் 56வது இடத்திலும், மும்பை விமான நிலையம் 73வது இடத்திலும் இடம்பிடித்துள்ளன. உலகளவில் முதல் 20 இடங்களில் எந்த ஒரு இந்திய விமான நிலையமும் இடம் பெறாத போதிலும், கடந்த வருடங்களை விட இந்த ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி தெளிவாகக் காணப்படுகிறது.
உலகளவில் முதல் இடத்தை சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையம் தொடர்ந்து தக்கவைத்துள்ளது. இரண்டாம் இடத்தில் தோஹா நகரில் உள்ள ஹமாத் சர்வதேச விமான நிலையம் உள்ளது. டோக்கியோவில் உள்ள ஹனேடா விமான நிலையம் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. சியோல் நகரின் இன்சியான் விமான நிலையம், நான்காவது இடத்திலும், நரிடா சர்வதேச விமான நிலையம் ஐந்தாவது இடத்திலும் உள்ளன.
இதனைத் தொடர்ந்து ஹாங்காங், பாரிஸ், ரோம், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, துபாய், ஹெல்சின்கி, வான்கூவர், இஸ்தான்புல், வியன்னா, மெல்போர்ன், சென்ட்ரேர், கோபன்ஹேகன், ஆம்ஸ்டர்டாம் மற்றும் பஹ்ரைன் ஆகிய நகரங்களில் உள்ள விமான நிலையங்கள் உலகின் சிறந்த முதல் 20 இடங்களைப் பிடித்துள்ளன.
இந்த தரவரிசை, விமான பயணிகளின் நேரடி அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு செய்யப்படுவதால், இது ஒரு உண்மையான தரமதிப்பீடாகக் கருதப்படுகிறது. இந்திய விமான நிலையங்கள் இப்படி முன்னேற்றம் காண்பது, சர்வதேச பயண சேவைகளில் நம்முடைய தரத்தை உலகத்தரத்துக்கு கொண்டு செல்லும் முயற்சியில் ஒரு முக்கிய படியாகும்.