புதுடில்லி: மேற்கு வங்கத்தில் வக்ப் திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறிய நிலையில், இது தொடர்பாக வங்கதேசம் வெளியிட்ட கருத்துக்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் ஏற்பட்ட வன்முறையை அடுத்து பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வங்கதேசம் வெளியிட்ட கருத்து குறித்து இன்று இந்திய வெளியுறவுத்துறை கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், மேற்கு வங்கத்தில் நடந்த சம்பவங்களை பற்றிய வங்கதேசத்தின் கருத்தை இந்தியா நிராகரிக்கிறது என்று கூறினார். வங்கதேசத்தில் சிறுபான்மையினர் தொடர்ந்து துன்புறுத்தப்படுவது குறித்த இந்தியாவின் புகாரை மறைக்க இது ஒரு கபட முயற்சி எனவும் அவர் தெரிவித்தார்.
அங்கு இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் தண்டிக்கப்படாமல் சுதந்திரமாக சுற்றித் திரிகிறார்கள் என அவர் சுட்டிக்காட்டினார். தேவையற்ற அரசியல் கருத்துகளை வெளியிடுவதற்குப் பதிலாக, வங்கதேசம் தன்னிடம் உள்ள சிறுபான்மை மக்களின் உரிமைகளை பாதுகாக்க கவனம் செலுத்த வேண்டும் எனவும் வெளியுறவுத்துறை வலியுறுத்தியுள்ளது.