புதுடில்லி: அமெரிக்கா விதித்துள்ள கூடுதல் வரிகள் இருந்தாலும், இந்தியா தொடர்ந்து ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் என்று இந்திய தூதர் வினய் குமார் தெரிவித்தார். ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதியை குறைக்க அமெரிக்கா அழுத்தம் கொடுத்தாலும், இந்தியா தன் தேசிய நலனைக் கருத்தில் கொண்டு எங்கு சிறந்த ஒப்பந்தம் கிடைக்கிறதோ அங்கிருந்து எண்ணெய் வாங்கும் என்று அவர் வலியுறுத்தினார்.

இந்திய நிறுவனங்கள் வணிக அடிப்படையில் தீர்மானம் எடுக்கும் நிலையில், வர்த்தக பரிமாற்றங்களில் நியாயமற்ற தடைகள் விதிக்கப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று தூதர் விமர்சித்தார். அமெரிக்காவின் இந்த வரி உயர்வு உலகளாவிய வர்த்தகக் கொள்கைகளை பாதிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்தியாவின் 140 கோடி மக்களின் தேவையை பூர்த்தி செய்ய எரிசக்தி துறையில் நிலைத்தன்மையும் வளர்ச்சியும் அவசியம் என வினய் குமார் தெரிவித்தார். அதற்காக ரஷ்யாவோடு மட்டுமல்லாது பல்வேறு நாடுகளுடனும் ஒத்துழைப்பை இந்தியா தொடர்ந்து வலுப்படுத்தும் என்றும் அவர் கூறினார்.
நாட்டின் தேசிய நலனைக் காக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். எரிசக்தி துறையில் எங்கு சிறந்த விலை, சிறந்த நிபந்தனை கிடைக்கிறதோ அங்கிருந்து எண்ணெய் வாங்கும் உரிமையை இந்தியா பாதுகாத்துக் கொள்ளும். இந்த அணுகுமுறையால் உலக எண்ணெய் சந்தையில் நிலைத்தன்மை ஏற்படும் என்று தூதர் வினய் குமார் உறுதியாக தெரிவித்தார்.