புதுடெல்லி: ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் கலிங்கா தொழில்நுட்பக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்குள்ள விடுதியில் ஏராளமான நேபாள மாணவர்கள் தங்கியுள்ளனர். அந்த வகையில், இங்கு பி.டெக் மூன்றாம் ஆண்டு படித்து வந்த 20 வயது நேபாள மாணவி கடந்த ஞாயிற்றுக்கிழமை விடுதி அறையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாணவியின் மரணத்திற்கு நீதி கோரி அங்கு படிக்கும் நேபாள மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ”இந்தியாவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களின் பாதுகாப்பிற்கு, மத்திய அரசு முன்னுரிமை அளிக்கிறது,” என, வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். நிருபர்களின் கேள்விக்கு பதிலளித்த ரந்தீர் ஜெய்ஸ்வால், “இந்த விவகாரத்தில் ஏற்கனவே பலரை ஒடிசா அரசு கைது செய்துள்ளது. இந்தியாவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்கு மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருகிறது” என்றார்.