புது டெல்லி: சர்வதேச நாணய நிதியம் (IMF) “டிஜிட்டல் சில்லறை பணம் செலுத்துதலின் எழுச்சி: இணக்கத்தின் மதிப்பு” என்ற தலைப்பில் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:- இந்திய தேசிய பணம் செலுத்துதல் கழகம் (NPCI) 2016-ல் யுபிஐ அறிமுகப்படுத்தியது. இந்த தளம் பல வங்கிக் கணக்குகளை மொபைல் செயலி மூலம் இணைக்க அனுமதிக்கிறது.
இதனால் குறைந்த செலவில் பணப் பரிமாற்றங்கள் எளிதாகவும், வேகமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும். யுபிஐ ஒவ்வொரு மாதமும் 1,800 கோடிக்கும் அதிகமான பரிவர்த்தனைகளைக் கையாளுகிறது, இது ஆண்டுக்கு ஆண்டு 32 சதவீதம் அதிகரிப்பு. யுபிஐ இந்தியாவை ரொக்கம் மற்றும் அட்டை அடிப்படையிலான பணம் செலுத்தும் முறையிலிருந்து டிஜிட்டல் பொருளாதாரமாக மாற்றியுள்ளது.

தனிநபர்கள் மற்றும் சிறு வணிகங்களுக்கான நிதி சேர்க்கைக்கான முக்கிய செயல்படுத்துபவராக யுபிஐ மாறியுள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து டிஜிட்டல் பணம் செலுத்துதல்களிலும் 85 சதவீதம் யுபிஐ கணக்குகள் மூலம் செய்யப்படுகிறது. இதில், 491 மில்லியன் மக்கள், 65 மில்லியன் வணிகர்கள் மற்றும் 675 வங்கிகள் ஒரே தளத்தில் இணைக்கப்பட்டுள்ளன. இந்த யுபிஐ அமைப்பு உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.
உலகளவில் செய்யப்படும் டிஜிட்டல் பணப்பரிமாற்றங்களில் 50 சதவீதம் யுபிஐ மூலம் நடைபெறுகிறது. இந்தியாவைத் தாண்டி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சிங்கப்பூர், பூட்டான், நேபாளம், இலங்கை, பிரான்ஸ் மற்றும் மொரீஷியஸ் போன்ற நாடுகளுக்கு யுபிஐ விரிவடைந்துள்ளது. ஐரோப்பாவில், பிரான்சில் முதன்முறையாக யுபிஐ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது வெளிநாடுகளுக்குச் செல்லும் இந்தியர்களும், வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களும் பணம் செலுத்துவதை எளிதாக்கியுள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.