புதுடில்லி : ‘பொருளாதார மந்தநிலை, வேலையில்லா திண்டாட்டம், பருவநிலை மாற்றம் போன்ற உலகளாவிய சவால்களுக்கு மத்தியில், இந்தியா நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக திகழ்கிறது’ என, பிரதமர் மோடி கூறினார்.
டில்லியில் நடந்த தனியார் ‘டிவி’ நிகழ்ச்சியில், இந்தியாவின் முன்னேற்றம் மற்றும் பொருளாதார வளர்ச்சி குறித்து மோடி பேசினார். 3வது முறையாக ஆட்சி அமைந்து 125 நாட்கள் முடிவில் ரூ. 9 லட்சம் கோடி மதிப்பிலான உள்கட்டமைப்பு திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
15 புதிய வந்தே பாரத் ரயில்கள் தொடங்கப்பட்டுள்ளன, சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 125 நாட்களில் 6 முதல் 7 சதவீதம் வரை உயர்ந்துள்ளது’ என்று மோடி கூறினார். இந்தியாவின் வளர்ச்சி மற்றும் முதலீடு குறித்து உலகமே உற்சாகமாக இருப்பதாகவும், டிஜிட்டல் உள்கட்டமைப்பால் உலகமே வியப்படைவதாகவும் அவர் கூறினார்.
இந்தியா 1 டிரில்லியன் ஜிடிபியை எட்ட 63 ஆண்டுகள் ஆனது, ஆனால் 2 டிரில்லியன் டாலர்களை எட்ட 7 ஆண்டுகள் ஆனது. 2020ல் 3 டிரில்லியன் டாலர்கள். உலகின் 11வது பெரிய பொருளாதாரமாக இருந்த இந்தியா, 10 ஆண்டுகளில் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக முன்னேறியுள்ளது.