நியூயார்க் நகரில் நடைபெற்ற ஐநா பொதுச்சபை கூட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே கடும் பதிலடி பரிமாற்றம் நடந்தது. பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், போர் நிறுத்தம் தொடர்பாக தவறான தகவல்களை முன்வைத்தார். அதற்கு இந்தியா தரப்பில் தக்க பதில் கொடுக்கப்பட்டு, பாகிஸ்தானின் பொய்யான கதைகள் வெளிச்சத்திற்கு கொண்டுவரப்பட்டன.

இந்தியாவின் நிரந்தர தூதரகத்தின் முதல் செயலாளர் பெட்டல் கெலாட், பாகிஸ்தான் பயங்கரவாதத்தை தொடர்ந்து ஊக்குவித்து வருவதை வலியுறுத்தினார். ஜம்மு காஷ்மீர் பஹல்காமில் நடந்த தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டதாகவும், அதன் பின்னரே பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு மன்றாடியதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், பல பாகிஸ்தான் விமானப்படை தளங்கள் இந்திய தாக்குதலில் அழிக்கப்பட்டதாகவும், அந்த ஆதாரங்கள் உலகிற்கு கிடைத்துள்ளதாகவும் இந்தியா வலியுறுத்தியது. பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்யும் நாடு என்பதால், அதன் பிரதமரின் உரைகள் அபத்தமானவை என்றும் இந்தியா விமர்சித்தது. மூன்றாம் தரப்பினருக்கு இடமில்லை, அனைத்து பிரச்னைகளும் இருதரப்பு முறையில் தீர்க்கப்படும் எனவும் தெளிவுபடுத்தப்பட்டது.
பயங்கரவாதத்தை எந்த வடிவிலும் இந்தியா சகிக்காது என்றும், அணு மிரட்டல்களின் கீழ் இந்தியா ஒருபோதும் அடிபணியாது என்றும் உலகிற்கு வலுவான செய்தி அனுப்பப்பட்டது. பாகிஸ்தான் உடனடியாக அனைத்து பயங்கரவாத முகாம்களையும் மூடிக் கொண்டு, தேடப்படும் பயங்கரவாதிகளை ஒப்படைக்க வேண்டும் என இந்தியா வலியுறுத்தியது. இந்த நிகழ்வு, பாகிஸ்தானின் நிலைப்பாடு சர்வதேச அளவில் மீண்டும் கேள்விக்குறியாக மாறியுள்ளது.