புதுடெல்லி: பட்ஜெட்டுக்கு பிந்தைய இணையதளத்தில் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் உரையாற்றினார். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “எந்தவொரு நாட்டின் வளர்ச்சிக்கும் நிலையான கொள்கைகளும், நல்ல வணிகச் சூழலும் மிகவும் முக்கியம். 10 ஆண்டுகளுக்கும் மேலாக அரசின் நிலையான கொள்கைகளை நாடு கண்டு வருகிறது. உலகின் பல நாடுகளில் தற்போது நிலவும் அரசியல் நிச்சயமற்ற நிலையில், ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை வளர்ச்சி மையமாக பார்க்கிறது.
கொரோனா தொற்றுநோய்களின் போது உலகப் பொருளாதாரம் மந்தமடைந்தபோது, இந்தியா உலகளாவிய வளர்ச்சியை துரிதப்படுத்தியது. சுயசார்பு இந்தியா என்ற தொலைநோக்கு பார்வையை பின்பற்றி சீர்திருத்தங்களை துரிதப்படுத்தியதன் மூலம் இது சாத்தியமானது. இந்த முயற்சிகள் பொருளாதாரத்தில் கொரோனாவின் தாக்கத்தை குறைத்து, இந்தியா வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றாக மாற உதவியது.
உலகப் பொருளாதாரத்தின் வளர்ச்சி இயந்திரம் இந்தியா. சவாலான காலங்களில் இந்தியா தனது வலிமையை நிரூபித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில், சீர்திருத்தங்கள், நிதி ஒழுக்கம், வெளிப்படைத்தன்மை மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சி ஆகியவற்றில் இந்தியா தனது உறுதிப்பாட்டை தொடர்ந்து நிரூபித்துள்ளது. இப்போது உலகின் ஒவ்வொரு நாடும் இந்தியாவுடனான பொருளாதாரக் கூட்டாண்மையை வலுப்படுத்த விரும்புகின்றன. இந்தக் கூட்டாண்மையின் அதிகபட்ச பலன்களைப் பெற நமது உற்பத்தித் துறை முன்வர வேண்டும்” என்று அவர் அழைப்பு விடுத்தார்.