புதுடெல்லி: நிஜ்ஜார் கொலை தொடர்பாக கனேடிய ஊடகம் ஒன்றுக்கு இந்தியா பதிலளித்துள்ளது. அவதூறு பரப்புரைகள் இரு நாடுகளுக்கு இடையேயான உறவை சீர்குலைக்கும் என இந்தியா எச்சரித்துள்ளது.
காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை தொடர்பாக இந்தியா மீது கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. இந்தியா மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறிய கனடா அரசுக்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஹர்தீப் சிங் நிஜ்ஜாரைக் கொல்ல சதித் திட்டம் தீட்டப்பட்டது குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு தெரியும் என்று கனேடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. இதற்கு பதில் அளித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஊடகங்களில் வரும் செய்திகள் குறித்து பொதுவாக நாங்கள் கருத்து தெரிவிப்பதில்லை.
எவ்வாறாயினும், ஆதாரமில்லாமல் ஒரு நாளிதழில் வெளியிடப்பட்ட இதுபோன்ற கேலிக்குரிய செய்திகளை கனடா அரசு நிராகரிக்க வேண்டும். இதுபோன்ற அவதூறு பரப்புரைகள் இரு நாடுகளுக்கும் இடையே ஏற்கனவே சேதமடைந்துள்ள உறவுகளை மேலும் சேதப்படுத்தும்.