புதுடில்லி: நிலநடுக்கத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா மனிதநேய உதவி செய்துள்ளது. அந்நாட்டின் மோசமான சூழ்நிலையை கருத்தில் கொண்டு, 21 டன் எடையிலான நிவாரண பொருட்கள் காபூலுக்கு விமானம் மூலம் அனுப்பப்பட்டுள்ளன.

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம் பல ஆயிரம் உயிரிழப்புகளை ஏற்படுத்தியதோடு, 5000க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து தரைமட்டமாயின. இன்னும் பலர் காணாமல் போயிருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த கடுமையான நிலைமையை மனதில் கொண்டு, இந்தியா விரைவாக உதவிக்கரம் நீட்டியுள்ளது.
நிவாரணப் பொருட்களில் மருந்துகள், போர்வைகள், சக்கர நாற்காலிகள் உள்ளிட்ட அத்தியாவசிய உதவிகள் அடங்கியுள்ளன. வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவு செய்து, “ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தியா தொடர்ந்து உதவி செய்து கொண்டே இருக்கும். நிலைமையை நெருக்கமாக கண்காணித்து வருகிறோம். வரும் நாட்களில் கூடுதல் நிவாரண உதவிகள் அனுப்பப்படும்” என தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் உடனடி மனிதநேய நடவடிக்கை, உலகளாவிய பாராட்டைப் பெற்றுள்ளது. அண்டை நாடான ஆப்கானிஸ்தானின் சிரம நேரத்தில் உதவிக்கரம் நீட்டியிருப்பது, இந்தியாவின் மனிதநேயம் மற்றும் அண்டை நாட்டின் நலனில் காட்டும் அக்கறையை வெளிப்படுத்துகிறது.