திருத்தப்பட்ட வக்ஃப் மசோதாவுக்கு எதிராக மேற்குவங்கத்தில் வெடித்த வன்முறை போராட்டங்களைத் தொடர்ந்து, அந்த மாநிலத்தில் உள்ள சிறுபான்மை முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என வங்கதேசம் இந்தியாவிடம் கோரிக்கை விடுத்தது. இதை மத்திய அரசு கடுமையாக நிராகரித்துள்ளது. வங்கதேசத்தின் இந்த கோரிக்கை, அங்குள்ள சிறுபான்மையினரின் நிலையை மறைக்க உருவாக்கப்பட்ட சூழ்ச்சியான செயல் எனவும், மேற்குவங்கத்தில் நடந்த சம்பவங்களை அதனுடன் ஒப்பிட்டு பார்க்க முடியாது எனவும் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
வங்கதேசத்தில் சிறுபான்மையினர் தொடர்ந்து துன்புறுத்தப்படுவதைக் குறித்து இந்தியா பலமுறை கவலை தெரிவித்துள்ளது. இந்த நிலையில், வங்கதேசம் தனது நிலையை மறைக்க, மேற்குவங்கத்தில் நடந்த சம்பவங்களை உபயோகிக்க முயற்சி செய்கிறது என மத்திய அரசு விமர்சித்துள்ளது. வங்கதேசத்தில் இந்துக்கள் மீது தாக்குதல் நடப்பது குறித்து முன்பே கவலை வெளியிடப்பட்டதாகவும், அந்த நாடு தனது சொந்த சிறுபான்மையினரின் பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் இந்தியா அறிவுறுத்தியுள்ளது.
மேற்குவங்கத்தின் முர்ஷிதாபாத்தில் வன்முறை வெடித்த நிலையில், வங்கதேச ஊடுருவல்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டிருக்கலாம் என உள்துறை அமைச்சகம் சந்தேகம் வெளியிட்டுள்ளது. இதையடுத்து, அங்கு கூடுதல் பாதுகாப்புப் படைகள் அனுப்பப்பட்டுள்ளன. இந்த வன்முறைக்குப் பின்னால் உள்ள சக்திகள் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
மத்திய அரசின் வக்ஃப் மசோதாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில் இடைக்காலத் தடை வழங்கப்பட்ட நிலையில், இந்த மசோதா மேலும் அரசியல் மற்றும் பன்னாட்டு சர்ச்சையை கிளப்பியுள்ளது.