மேற்கு ஆப்ரிக்காவில் கோகோ உற்பத்தி காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்டு வருகிறது. சாக்லேட் தேவையில் பங்காற்றும் நாடுகள், உற்பத்தி குறைவால் பெரும் சிக்கலுக்கு ஆளாகி உள்ளன. இது இந்தியாவுக்கு முக்கிய வாய்ப்பாக அமையக்கூடும். ஆனால், இந்தியாவின் நடைமுறை சிந்தனைகள் மற்றும் குறைந்த முதலீடுகள் இந்த வாய்ப்பை கை விடச்செய்யலாம் என்ற அச்சமும் நிலவுகிறது.

உலக கோகோ உற்பத்தியில் 70% பங்குள்ள மேற்கு ஆப்ரிக்க நாடுகள், தற்போது பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளன. 2023–24 ஆம் ஆண்டில் உலக கோகோ உற்பத்தி 13% குறைந்து 43.68 லட்சம் டன்னாக இருப்பது, 4.94 லட்சம் டன் பற்றாக்குறையை உருவாக்கியுள்ளது. இதன் காரணமாக, கோகோ விலை மிக அதிகமாகி 11.25 லட்சம் ரூபாயை எட்டியுள்ளது. இது உலக சாக்லேட் நிறுவனங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கானா மற்றும் ஐவரி கோஸ்ட் ஆகியவை பெரிய அளவில் உற்பத்தி குறைவை சந்தித்துள்ளன. கானாவில் 8 லட்சம் டன் இருந்து 5.31 லட்சமாக வீழ்ச்சி கண்டுள்ளது. ஐவரி கோஸ்ட் 20% குறைந்து 1.80 லட்சம் டனாகும். இதனால், சர்வதேச கோகோ இருப்பும் குறைந்துவிட்டது. இந்த நிலையில்தான் இந்தியா, குறிப்பாக கர்நாடகா, கோகோ சாகுபடியில் முக்கிய பங்காற்றும் வாய்ப்பு பெற்றுள்ளது.
வளமான மழைக்காடுகளால் கர்நாடகா மாநிலத்தில் மூன்றாம் தலைமுறை விவசாயிகள் கோகோ சாகுபடியில் ஈடுபடுகின்றனர். ஆனால் காலநிலை மாற்றத்தால் சாகுபடிக்கு ஏற்ற வெப்பநிலைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இவை பிளாக் போட், ஸ்வாலன் ஷூட் வைரஸ் போன்ற நோய்களை உருவாக்கி, பயிர்களில் 50% வரை பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இந்தியா இந்த சவால்களை கவனித்து, திட்டமிட்டு செயல்பட்டால், சாக்லேட் உலகத்தில் புதிய தலைமை நாடாக மாறும் வாய்ப்பு மிக அதிகம் உள்ளது.