அமெரிக்கா, டல்லாஸில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 50 வயதான சந்திரமௌலி நாகமல்லையா தனது மனைவி மற்றும் மகன் முன்னிலையில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவைச் சேர்ந்த அவர், டல்லாஸில் உள்ள “டவுன்டவுன் சூட்ஸ்” ஹோட்டலில் மேலாளராகப் பணியாற்றி வந்தார்.
இந்த கொடூரச் சம்பவம் அமெரிக்கா முழுவதும் கவலையை ஏற்படுத்திய நிலையில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அரசியல் பிரமுகர் விவேக் ராமசாமி கண்டனத்தை வெளியிட்டார். “ஒரு அப்பாவி ஹோட்டல் மேலாளர், குடும்பத்தினரின் முன்னிலையில் இவ்வாறு தலை துண்டிக்கப்பட்டது மிகக் கொடூரமானது. சட்டத்தின் ஆட்சியை மீட்டெடுக்க வேண்டிய நேரம் இது” என அவர் வலியுறுத்தினார்.
விவேக் ராமசாமி அமெரிக்காவின் சின்சினாட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த பெற்றோருக்கு மகனாகப் பிறந்தவர். ஹார்வர்டு மற்றும் யேல் பல்கலைக்கழகங்களில் படித்த அவர், குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிட்டார். பின்னர் அதில் இருந்து விலகியிருந்தாலும், சமூக மற்றும் அரசியல் விவகாரங்களில் தொடர்ந்து கருத்துகளை வெளியிட்டு வருகிறார்.
இந்த சம்பவம் இந்திய வம்சாவளி மக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள இந்திய சமூகத்திற்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இச்சம்பவம் குறித்துப் பொலிஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.